கலாஷேத்ரா விவகாரம் – ஹரிபத்மனுக்கு பிணை வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு

மே.6

சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்ட உதவிப் பேராசிரியர் ஹரிபத்மனுக்கு பிணை வழங்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து, அந்த மனுவை மனுதாரர் வாபஸ் பெற்றுக்கொண்டார்.

சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா வளாகத்தில் செயல்பட்டுவரும் ருக்மணி அருண்டேல் கல்லூரியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அக்கல்லூரி நடனத்துறை உதவிப் பேராசிரியர் ஹரிபத்மன் கடந்த ஏப்.3-ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் பிணை வழங்கக்கோரி ஹரிபத்மன் தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதையடுத்து ஹரிபத்மன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவானது, விடுமுறை கால சிறப்பு அமர்வில் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது 4 ஆண்டுகளுக்கு பிறகு தனக்கு எதிராக தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக ஹரிபத்மன் தரப்பி்ல் வாதிடப்பட்டது. காவல்துறை தரப்பில், இந்த சம்பவம் தொடர்பாக 162 மாணவிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும், அவர்கள் ஹரிபத்மன் மீது குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளதாகவும் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள உள்விசாரணைக் குழுவை மாற்றியமைக்கக் கோரி 7 மாணவிகள் தொடர்ந்துள்ள வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது எனவும், இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களையும் கைது செய்ய வேண்டியிருப்பதால் ஹரிபத்மனுக்கு பிணை வழங்கக்கூடாது எனவும் காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ஹரிபத்மனுக்கு பிணை வழங்க மறுப்பு தெரிவித்து, வழக்கின் விசாரணையை வரும் ஜூன் 16-க்கு ஒத்திவைத்தார். இதையடுத்து இந்த மனுவை திரும்பப்பெற்றுக்கொள்வதாக மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை நீதிபதி ஏற்றுக்கொண்டதைத் தொடரந்து, மனு திரும்பப் பெறப்பட்டது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *