கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் – கருத்து கணிப்பில் தகவல்

ஏப்ரல்.26

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று பிரபல செய்தி நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான இறுதிவேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், மாநிலம் முழுவதும தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பிரதமர் மோடி வருகிற 29-ந் தேதி முதல் தனது பிரசாரத்தை தொடங்க உள்ளார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில் பல்வேறு தனியார் செய்தி நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றி தொடர்பான கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இதுவரை வெளியான கருத்து கணிப்புகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்றும் அல்லது அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று பெரிய கட்சியாக உருவெடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கர்நாடகத்தில் பிரபலமான ஒரு கன்னட செய்தி தொலைக்காட்சி ‘சி.ஓட்டர்’ நிறுவனத்துடன் இணைந்து கருத்து கணிப்பை நடத்தி அதன் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில், காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என்று தெரியவந்துள்ளது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் ஆளும் பா.ஜனதா 79 முதல் 89 தொகுதிகளிலும், காங்கிரஸ் 106 முதல் 116 தொகுதிகளிலும், ஜனதா தளம் (எஸ்) கட்சி 24 முதல் 34 தொகுதிகளிலும், பிறர் 5 தொகுதிகளிலும் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கர்நாடக தேர்தலையொட்டி அடுத்தடுத்து வரும் கருத்து கணிப்புகளில் காங்கிரசுக்கான வெற்றி வாய்ப்பு அதிகம் என்று தெரிவிக்கப்படுவதால், அக்கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அதேநேரத்தில் காங்கிரசின் வெற்றியை தடுத்து நிறுத்த பா.ஜனதா கட்சி முழு பலத்துடன் தேர்தல் களப்பணி ஆற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *