2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை யாராலும் வீழ்த்த முடியாது என்று ஏற்கனவே கூறப்பட்டாலும், பாஜக தொண்டர்கள் சாதாரணமாக இருந்துவிடக் கூடாது என பிரதமர் மோடி பேச்சு.
நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் விரக்தியில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
பாஜகவின் 44வது நிறுவன தினத்தையொட்டி, கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர், சமூகநீதி மீது பாஜக நம்பிக்கை கொண்டிருப்பதாகவும், மக்கள் நிதி திட்டம் மற்றும் அரசின் பல்வேறு திட்டங்களால் மக்கள் பலனடைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
சமூகநீதிக்கான பணிகளை பாஜக மேற்கொண்டுவரும் நிலையில், எதிர்க்கட்சிகள் தங்களது குடும்பத்தினர் குறித்தே கவலைப்பட்டு வருவதாகவும் மோடி விமர்சித்தார். எதிர்க்கட்சிகள் தற்போது கடும் விரக்தியில் இருப்பதால், மோடிக்கு புதைகுழி தோண்டப்படும் என்று கூறும் அளவுக்கு சென்றுவிட்டதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
இந்தியாவுக்காகவும், அரசியல் சாசனத்துக்காகவும் இரவு-பகலாக பாஜக பணியாற்றி வருவதாகவும் மோடி குறிப்பிட்டார். ஊழலை ஒழிக்கவும், சட்டம்-ஒழுங்கு சவால்களை எதிர்கொள்ளவும் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள பாஜக உறுதிபூண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
2024 மக்களவைத் தேர்தலில் பாஜக-வை யாராலும் வீழ்த்த முடியாது என்று ஏற்கனவே கூறப்பட்டாலும், பாஜக தொண்டர்கள் சாதாரணமாக இருந்துவிடக் கூடாது என்று கேட்டுக் கொண்டார். நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் மனங்களிலும் பாஜக தொண்டர்கள் இடம்பிடிக்க வேண்டும் என்று மோடி அறிவுறுத்தினார்.