தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய உதவிகளை கண்காணிக்கவும், இயற்கை சீற்றம் , நோய்த்தொற்று போன்ற அவசர கால நேரங்களில் பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும் மாவட்ட வாரியாக அமைச்சர்கள் பொறுப்பாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, சேலம் மாவட்டம் கே.என் நேரு, தேனி மாவட்டம் ஐ.பெரியசாமி, திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் எ.வ.வேலு, தருமபுரி மாவட்டம் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், தென்காசி மாவட்டம் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், இராமநாதபுரம் மாவட்டம் தங்கம் தென்னரசு, காஞ்சிபுரம் மாவட்டம் தா.மோ.அன்பரசன், திருநெல்வேலி மாவட்டம் செந்தில்பாலாஜி ஆகியோர் பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சக்கரபாணி, திருவள்ளூர் மாவட்டம் ஆர்.காந்தி, பெரம்பலூர் மாவட்டம் எஸ்.எஸ்.சிவசங்கர், தஞ்சாவூர் மாவட்டம் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாகப்பட்டினம் மாவட்டம் ரகுபதி உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள் பொறுப்பு அமைச்சர்களாக செயல்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட இந்த மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட ஆட்சித்தலைவர்கள், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள், மற்றும் அனைத்துத் துறைசார்ந்த அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து திட்டப்பணிகளை துரிதப்படுத்துதல், நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு சென்றடைவதை கண்காணித்தல் போன்ற தேவையான ஆலோசனைகள் வழங்குவார்கள் என்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.