தலைப்புச் செய்திகள் (26- 02-2024)

*வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து… முறையாக ஒப்புதல் பெற்று ஐ.பெரியசாமி மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க எம்.பி., எம்.எல்.ஏ. நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஆணை.

*மார்ச் 28- க்குள் நேரில் ஆஜராகி ஒரு லட்சம் ரூபாய்க்கு பிணை செலுத்த ஐ.பெரியசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு… கடந்த 2006 முதல் 2011 வரை அமைச்சராக இருந்த வீட்டு வசதி வாரிய மனைகளை முறைகேடாக ஒதுக்கியதாக தொடரப்பட்டிருந்த வழக்கில் விடுவிக்கப்பட்டிருந்த ஐ.பி.க்கு சிக்கல்.

*சென்னை மெரினா கடற்கரையில் பிரமாண்டமாகவும் நவீனமாகவும் புதுப்பிக்கப்பட்டு உள்ள அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி நினைவிடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு..க.ஸ்டாலின் .. அமைச்சர்கள், நாடாளுமன்ற – சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்பு.

*மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீது விசாரணை … அமலாக்கத் துறைக்கு எதிராக எப்படி மாவட்ட ஆட்சியர்கள் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும்? என்று உச்சநீதிமன்றம் கேள்வி.

*அமலாக்கத்துறை மனுக்கு அளித்துள்ள பதிலில் அரசின் ஒரு பகுதியாக உள்ள மாவட்ட ஆட்சியர்கள் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும் என்று தமிழ்நாடு அரசு விளக்கம்… சட்டவிரோத மணல் விற்பனையை விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இல்லாத போது சம்மன் அனுப்பவும் அதிகாரம் இல்லை என்று பதில்.

*நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி அமைப்பதாக ஜி.கே.வாசன் அறிவிப்பு … பல்லடத்தில் நாளை மோடி பங்கேற்கும் கூட்டத்தில் கலந்துகொள்ள இருப்பதாகவும் விளக்கம்.

*அண்ணாமலையின் என் மண்,என் மக்கள் பயணத்தின் நிறைவை முன்னிட்டு பல்லடத்தில் நாளை மோடி பங்கேற்கும் பிரமாண்ட கூட்டத்திற்கு பாஜக ஏற்பாடு… கூட்டணி கட்சித் தலைவர்களையும் மேடையில் ஏற்ற தீவிர முயற்சி.

*திமுக உடனான தொகுதிப் பங்கீடு குறித்த டெல்லியில் காங்கிரஸ் நிர்வாகிகள் நடத்திய ஆலோசனையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் பங்கேற்பு… எத்தனை தொகுதிகள்,எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து கருத்துப் பரிமாற்றம்.

*மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா மூன்று தொகுதிகை கேட்பதால் திமுக பேச்சுவார்த்தையில் தேக்க நிலை … கடந்த தேர்தலில் தலா இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட இரு கட்சிகளும் இப்போது தலா மூன்றை கேட்பதால் உடன்பாட்டில் தாமதம்.

*பாஜகவில் சேரப்போவதாக வெளியான தகவலுக்கு முன்னாள் அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மறுப்பு … என் இறுதி மூச்சு உள்ளவரை அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பயணிப்பேன் என்று வலை தளத்தில் பதிவு.

*நாடாளுமன்றத் தேர்தலை தமிழ்நாட்டில் வாரத்தின் தொடக்கத்திலோ இறுதியிலோ நடத்தாமல் புதன் கிழமை நடத்துமாறு அரசியல் கட்சிகள் தெரிவித்து உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு தகவல்… பொன்முடி வெற்றிப் பெற்றிருந்த திருக்கோவிலூர் மற்றும் விஜயதாரணி ராஜினாமா செய்த விளவங்கோடு தொகுதிகள் காலியாகி விட்டதா என்பது பற்றி தமக்கு இன்னும் தகவல் வரவில்லை என்றும் விளக்கம்.

*விஜயதாரணி தனது பதவியை ராஜினாமா செய்ததால் விளவங்கோடு தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்துக்கு சட்டப் பேரவை செயலாளர் கடிதம்…திருக்கோவிலூர் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட வேண்டுமா என்பது சபாநாயகரின் பரிசீலனையில் உள்ளதாக பதில்.

*மக்களவைத் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட 200 கம்பெனி துணை ராணுவத்தினர் மார்ச் முதல் வாரத்தில் தமிழ்நாட்டிற்கு வருகின்றனர் …கடந்த தேர்தலில் 160 கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் சத்யபிரதா சாகு விளக்கம்.

*போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் ஆளும் திமுக நிர்வாகிகள் என்பது வெட்கக் கேடானது என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் … தமிழக காவல் துறை சுதந்திரமாக செயல்பட்டு ஜாபர் சாதிக்கின் பின்னணி குறித்து விரிவாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தல்.

*டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு அலுவலகத்தில் ஆஜராகுமாறு ஜாபர் சாதிக்கிற்கு சம்மன் … ஜாபர் சாதிக் தலைமறைவாக இருப்பதால் அவரது வீட்டில் சம்மனை ஒட்டியது போதைப் பொருள் தடுப்புத் துறை.

*கடந்த மூன்று ஆண்டுகளாக ரூ 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை கடத்திய வழக்கில் மூன்று பேர் கைது … சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக் மற்றும் அவருடைய சகோதரர்கள் மைதீன், சலீம் ஆகியோரையும் தேடுகிறது மத்திய போதைப் பொருள் தடுப்புத்துறை.

*அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து உள்ள அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு …. கோட நாடு கொலை வழக்கு குறித்து தெரிவித்த கருத்துக்காக உதயநிதியிடம் இழப்பீடு கேட்டு தாக்கல் செய்துள்ள வழக்கில் எடப்பாடி பதிலளிக்க நோட்டீஸ்.

*இரு மதத்தினர் இடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் அண்ணாமலை பேசியதாக சேலம் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடைவிதிப்பு … அண்ணாமலையின் பேச்சு குறித்து பதிலளிக்குமாறு மனுதாரர் பியூஸ் மானுசுக்கு உத்தரவு.

*காஞ்சிபுரம் அருகே செயல்படும் நில எடுப்பு அலுவலகத்தை பரந்தூரில் புதிய விமான நிலையம் கையகப்படுத்துவதற்கு எதிரான கிராம மக்கள் டிராக்டருடன் முற்றுகை … 100 பேர் கைது.

*நாகை அருகே நடுக்கடலில் கீச்சாங்குப்பம் மீனவர்களுடன் ஏற்பட்ட தகராறில் திடீர்குப்பத்தை சேர்ந்த சிவனேசெல்வம் என்பவர் உயிரிழப்பு.திடீர்குப்பத்தை சேர்ந்த காலச்சிநாதன் என்பவர் கடலில் மூழ்கி மாயம்… மோதலில் காயமடைந்த மற்றொரு மீனவர் ஆத்மநாபன் நாகை மருத்துவக் கல்லூரியில் அனுமதி.

*இலங்கையில் இருந்து கடததிவரபட்டு ரமோஷவரம் அருகே நடுக்கடலில் வீசப்பட்ட பல கோடி ரூ பாய் மதிப்புள்ள தங்கத்தை தேடும் பணி ஐந்தாவது நாளாக தீவிரம் … கடத்தல் தடுப்புக் குழு சுற்றி வளைத்ததால் நடுக்கடலில் வீசப்பட்ட தங்கத்தை மீட்க முயற்சி.

*தமிழ்நாட்டில் 34 ரயில் நிலையங்களை உலகத் தரத்தில் மேம்படுத்த காணொளி மூலம் அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி … கோவை, ஈரோடு, திண்டுக்கல், தூத்துக்குடி, அம்பத்தூர். கிண்டி, பரங்கிமலை ரயி்ல் நிலையங்கள் நவீனமாகிறது.

*வரானாசி ஞான வாபி மசூதியின் தெற்கு பாதாள அறைக்குள் இந்துக்கள் பூஜை நடத்த மாவட்ட நீதிமன்றம் கடந்த ஜனவரியில் கொடுத்த அனுமதிக்கு தடை விதிக்க அலகாபாத் உயர்நீதிமன்றம் மறுப்பு … அஞ்சுமென் இன்டெமியா மஸ்ஜித் கமிட்டி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு.

*ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம் .. ராணுவத்தில் சேரத் துடிக்கும் இளைஞர்கள் கனவை நிறைவேற்ற வலியுறுத்தல்.

*அரியானாவில் ஐ.என்.எல்.டி. கட்சித் தலைவர் நாபே சிங் ராதே நேற்று கொல்லப்பட்ட வழக்கில் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீஸ் விசாரணை … கொலயாளிகள் ஐ- 20 காரில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியிருப்பது முதற்கட்ட விசாரணையில் கண்டு பிடிப்பு. கொலையாளிகள் கைது செய்யப்படும் வரை உடலை வாங்கப் போவதில்லை என்று உறவினர்கள் அறிவிப்பு.

*ரஷ்யாவுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறும் போரில் 31 ஆயிரம் வீரர்கள் இறந்துவிட்டதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தகவல் … ரஷ்யா தரப்பில் பலியான வீரர்களின் எண்ணிக்கை பற்றி முழுமையான தகவல் இல்லை,

*ஆப்கானிஸ்தானில் பொது இடத்தில் மேலும் ஒரு மரண தண்டனை நிறைவேற்றம் … கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் முன்னிலையில் சுட்டுக் கொலை.

*இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.. ராஞ்சியில் நடைபெற்ற 4ஆவது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி.

தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *