தலைப்புச் செய்திகள் (08-02-2024)

*சென்னையில் அண்ணா நகர், பாரிமுனை, கோபாலபுரம் ஆர்.ஏ.புரத்தில் உள்ள 13 தனியார் பள்ளிகளுக்கு மர்ம நபர் ஒருவன் ஈ மெயில் வெடிகுண்டு மிரட்டல் … பள்ளிகளில் சோதனை செய்ததில் எந்தவித மர்மப் பொருளும் கைப்பற்றப்படவில்லை என்று காவல்துறை விளக்கம்.

*பொதுமக்கள் யாரும் பதற்றப்பட வேண்டாம் என்று காவல்துறை வேண்டுகோள் … சைபர் கிரைம் போலீஸ் உதவியோடு, விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை காவல்துறை கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தகவல்.

*இலங்கை நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த 19 தமிழக மீனவர்கள் கைது. 19 மீனவர்களையும், 2 விசைப் படகுகளையும் சிறைப்பிடித்தது இலங்கை கடற்படை.

*எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான மறு ஆய்வு வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷே விசாரிப்பதற்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அனுமதி … தலைமை நீதிபதியின் ஒப்புதல் கிடைத்ததால் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர், ஐ.பெரியசாமி. தங்கம் தென்னரசு, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது குறித்து தொடர்ந்து விசாரிப்பார் ஆனந்த் வெங்கேடேஷ்.

*கீழமை நீதிமன்றங்களில் திர்ப்புக் கூறப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து மூன்று மாதங்கள் முன்பு விசாரணைக்கு எடுத்தார் … இதற்கு எதிரான மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தமது தீர்ப்பில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியால் நியிமிக்கப்படும் நீதிபதி விசாரிக்கலாம் என்று மூன்று தினம் முன்பு தீர்ப்பு அளித்திருந்தது.

*கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை … ராமேஸ்வரபட்டியில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஐந்து பேர் ஆய்வு

*செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கக் கோரி சென்னை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு … அசோக் குமார் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்து கொண்டு விசாரணைக்கு ஆஜராகவில்லை.

*முதல்வர் ஸ்டாலின் தனது வெளிநாட்டு பயணம் மூலம் ஈர்த்த முதலீடுகள் எவ்வளவு என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி … 2030- க்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் முதலீடு என்ற இலக்குக்கான வரைவு அறிக்கை வெளியிடப்படவில்லை என்றும் புகார்.

*விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே கல்குவாரியில் மண் சரிந்து தொழிலாளர்கள் இருவர் உயிரிழப்பு … பெரும்பாக்கத்தில் கல்குவாரியில் வெடி வைக்க பள்ளம் தோண்டிய போது மண் சரிந்து விபத்து.‘

*நீலகிரி மாவட்டத்தில் நேற்று மண் சரிந்து ஆறு பெண்கள் உயிரிழந்தது தொடர்பாக கட்டிட உரிமையாளர் உட்பட ஆறு பேர் சிறையில் அடைப்பு .. மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்த அளவை விட அதிக பரப்பில் வீடு கட்டுவது விசாரணையில் அம்பலம்.

*அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பிப்ரவரி 15- ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் … சங்க நிர்வாகிகள் கூட்டாக அறிவிப்பு.

*கடந்த 2022-ஆம் ஆண்டில் டோக்வாண்டோ பயிற்சியாளர் தர்மராஜன் என்பவர் மீது மாணவிகள் மூலம் போலியாக போக்சோ வழக்குப்பதிவு செய்ய தூண்டிய இருவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு…. மாணவிகள் அளித்த புகாரில் தர்மராஜன் என்பவர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மாணவிகளை தனித்தனியாக அழைத்து விசாரித்ததில், அரவிந்த், பிரதீப் என இருவரின் கட்டாயத்தால் போலியாக புகாரளித்ததாக வாக்குமூலம் அளித்திருந்தனர்.

*சென்னை திருவேற்காடு கோயிலில் அம்மன் கழுத்தில் அணிந்திருந்து எட்டு சவரன் தங்க சங்கிலியை அர்ச்சகர் திருடி அடகு வைத்தது கண்டுபிடிப்பு … தலைமறைவாக உள்ள அர்ச்சகர் சண்முகத்திற்கு போலீஸ் வலை வீச்சு.

*மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காதது மற்றும் வெள்ள நிவாரணம் வழங்கவில்லை என்று புகார்… நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு திமுக மற்றும் தோழமைக் கட்சி எம்.பி.க்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்.

*மத்திய அரசைக் கண்டித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள் டெல்லியில் போராட்டம்… நிதிப் பகிர்வில் மத்திய அரசு பாரபட்சம் பார்ப்பதாக பினராயி விஜயன் குற்றச்சாட்டு.

*மாநில அரசுகளிடம் மத்திய அரசு காட்டும் பாகுபாடு ஆக்சிஜனை நிறுத்துவதற்கு சமம். மத்திய அரசு செயல்பாடுகளை கண்டும் காணாமல் இருக்கும் பாஜக மாநில முதல்வர்களுக்கு இதே நிலை ஏற்படும்… டெல்லி ஜந்தர் மந்தரில் கேரள முதல்வர் பங்கேற்ற போராட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் வீடியோ வாயிலாக உரை.

*நாட்டின் பொருளாதார நிலை குறித்து மக்களவையில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்… கடந்த 2004 – 2014 வரை நடந்த காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதார கொள்கைகள் தொடர்பாக மக்களவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளை அறிக்கை தாக்கல் … பாஜக 2014 ல் ஆட்சி பொறுப்பேற்கும் போது, பொருளாதாரம் நொடிக்கும் நிலையில் இருந்தாகவும் வாரக்கடன்கள் காரணமாக வங்கிகளும் பலவீனமாக இருந்தது என்றும் வெள்ளை அறிக்கையில் தகவல்.

*பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டு உள்ள கருப்பு அறிக்கையில் நாட்டில் ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக புகார்…. பல இடங்களில் காங்கிரஸ் கட்சியை கவிழ்த்துவிட்டு, கடந்த 10 ஆண்டுகளில் 411 எம்எல்ஏக்களை பாஜக கைப்பற்றியுள்ளது. பாஜக அல்லாத மாநிலங்களுக்கு வரி பகிர்ந்தளிப்பதில் பாரபட்சம் என்றும் விமர்சனம்.

*பிரதமர் மோடி இதர பிற்படுத்தப் பட்டோர் பிரிவில் பிறந்தவர் அல்ல. குஜராத் மாநிலத்தில் தெலி என்ற சாதியில் பிறந்தவர். தெலி சாதி 2000-ஆம் ஆண்டுதான் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்கப்பட்டதாக இந்திய ஒற்றுமை பயணத்தின் போது ராகுல் காந்தி பரபரப்பு தகவல் …. மோடி பொதுப் பிரிவில் பிறந்தவர் என்பதால் தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுக்கிறார் என்றும் புகார்

*வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு. ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாக நீடிக்கிறது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் விளக்கம்.

*நாடாளுமன்றத்தை முற்றுகையிட ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் இருந்து டெல்லி நோக்கி ட்ராக்டரில் ஊர்வலமாகச் வந்த விவசாயிகள் நொயிடாவில் தடுத்து நிறுத்தம் …. 2020- ல் டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தின்போது அளித்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டு.

*தேசியவாத காங்கிரஸ் – சரத்சந்திர பவார்’ என்ற புதிய கட்சி மூலம் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுகிறது சரத்பவாரின் கட்சி… தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அஜித்பவார், கடந்த ஆண்டு ஜூலை மாதம் கட்சியை உடைத்து பாஜக கூட்டணியில் துணை முதலமைச்சராக பதவியேற்றாதால் சரத்பவாரின் புதிய கட்சி பெயருக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல்.

*ஜெர்மனியின் லூப்தான்சா விமான நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் சென்னையில் இருந்து பிராங்க்பர்ட்டுக்கு இயக்கப்படும் விமானம் ரத்து … தினசரி இயக்கப்படும் விமானத்தின் சேவை நிறத்தப்பட்டு இருப்பதால் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல வேண்டிய பயணிகள் தவிப்பு.

*பாகிஸ்தானில் பரபரப்பான சூழலில் நடைபெற்ற நாடாளுமன்றத்துக்கு 266 உறுப்பினர்களை தேர்வு செய்யவும் நான்கு மாகாண சட்டமன்றத்துக்கும் தேர்தலில் சீரான வாக்குப்பதிவு … செல்போன் மற்றும் இணைய சேவைகளை துண்டித்து விட்டு பலத்த பாதுகாப்புடன் தேர்தல்.

*பாகிஸ்தான் தேர்தலில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் தலைமையிலான முஸ்லீம் லீக், இம்ரான் கான் தலைமையிலான தெக்ரீ்க் இன் சாப் கட்சி மற்றும் பிலாவல் பூட்டோவின் மக்கள் கட்சி ஆகியவை இடையே கடும் போட்டி … சிறையில் இருக்கும் இம்ரான் கான் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதால் தேர்தலில் போட்டியிடவில்லை.

*அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான பிரதிநிதிகள் தேர்தலில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த நிக்கி ஹாலே போதிய ஆதரவு கிடைக்காததால் பின்னடைவு …குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட முன்னாள் அதிபர் டிரம்புக்கு வாய்ப்புகள் கூடுகிறது.

*சென்னையில் நடைபெற்றஎல டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கான ஏலத்தில் சுழற் பந்து வீச்சாளர் சாய் கிஷோர் 22 லட்சத்துக்கு ஏலம் … மற்றொரு வீரர் சஞ்சய் யாதவை ரூ 22 லட்சத்துக்கு வாங்கியது திருச்சி கிராண்ட் சோழா அணி.

தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *