தலைப்புச் செய்திகள் (04-04- 2024)

*மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியிலிருந்து நீக்க முடியாது … கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக் கோரிய இந்து சேனா தலைவரின் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.

*கோவையில் இந்த மாதம் 12 -ஆம் தேதி ராகுல் காந்தி,மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு … பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடும் தொகுதியில் பல லட்சம் பேரை திரட்டிக் காட்ட திட்டம்.

*சென்னைக்கு ஏப்ரல் 9 -ஆம் தேதி மாலை வரும் பிரதமர் மோடி திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரிக்கத் திட்டம்… நந்தனத்தில் இருந்து பனகல் பூங்கா,பாண்டி பஜார் வழியாக தேனாம்பேட்டை சிக்னல் வரை இரண்டு கிலோ மீட்டர் பயணம் செய்வதற்கு ஏற்பாடு.

*தமிழகத்தில் அமைக்கப்பட உள்ள 68,321 வாக்குச்சாவடிகளில் 8,050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை ,இதில் 181 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை…. அனைத்து மாவட்டங்களிலும் ஏப்.18- குள் தபால் வாக்குகளை பெறவேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்.

*தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலை தபால் வாக்கு செலுத்த விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்ட நிலையில், தபால் வாக்குகளை பெறும் பணி தொடக்கம்… 5 வயதை கடந்தவர்கள், மாற்றுத் திறனாளிகள், கொரோனா தொற்று உள்ளவர்கள் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு.

*உதகமண்டலம் மற்றும் குன்னூரில் நகராட்சி கடைகளின் வாடகையை திமுக அரசு உயர்த்திவிட்டது .. நிலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா விரைவில் சிறை செல்வார் என்றும் தேர்தல் பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி புகார்.

*மோடி ஆட்சியில் கார்ப்பரேட் எனப்படும் பெரு நிறுவனங்களின் பல லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்தது மட்டுமின்றி பெரு நிறுவனங்களுக்கான வரியும் 30 விழுக்காட்டில் இருந்து 22 வி்ழுக்காடாக குறைக்கப்பட்டது என்று மு.க.ஸ்டாலின் அறிக்கை … பெரு நிறுவனங்களுக்கு பெரிய சலுகைகளை செய்துவிடு தமது அரசு ஏழைகளின் அரசு என்று மோடி கூறுவது பொய் என்றும் விமர்சனம்.

*நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக்காக இன்றிரவு மதுரை வருவதாக இருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பயணம் திடீர் ரத்து … இரண்டாவது முறையாக அமி்த்ஷா பயணம் ரத்து செய்ப்பட்டு உள்ளதை அடுத்து புதிய பயணத் திட்டம் விரைவில் அறிவிக்கப்படலாம் என்றும் தகவல்.

*திருநெல்வேலியில் முன்னாள் சபாநாயகரும் திமுக மாவட்டச் செயலாளருமான ஆவுடையப்பன் அலுவலகத்தில் வருமான வரிச் சோதனை … தேர்தல் பரபரப்புக்கு இடையே நடத்தப்படும் சோதனையால் பரபரப்பு.

*காவிரி மேலாண்மை ஆணையம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் கூடி ஆலேசனை … தமிழ்நாடு நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியம் மற்றும் கர்நாடக தரப்பு அதிகாரிகள் பங்கேற்பு

*வறட்சி நீடித்து வருவதால் தமிழ்நாட்டிற்கு உடனடியாக தண்ணீர் திறந்து விட முடியாது. நீர் இருப்பு மற்றும் சூழலைக் கருத்தில் கொண்டு மட்டுமே தண்ணீர் திறக்க முடியும் காவிரி ஆணையக் கூட்டத்தில் கர்நாடகா தரப்பு பதில். .. 3.6 டி.எம்.சி. தண்ணீரை உடனே திறந்து விட வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்க மறுப்பு.

*ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுப்புற நிலத்தில் உள்ள மாசுவை சீர் செய்யும் திட்டத்தை வகுக்கும் பணியை தனியாருக்கு வழங்குவது ஏன் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி… மாசுவை அகற்றி சீர் செய்வதற்கான திட்டத்தை விரைந்து வகுக்க மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவு. அபாயகரமான கழிவுகள் தேங்கி உள்ளதால், ஆலையை இடிக்க உத்தரவிடக் கோரிய ​வழக்கு ஏப்ரல் 24-க்கு தள்ளிவைப்பு.

*துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு கோரி, அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகத்தின் தலைவர் முருகேசன் என்பவர் தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தள்ளுபடி .. மக்களுக்கு சேவை செய்ய அரசியலில் ஈடுபடுவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நீதிபதிகள் கருத்து.

*பள்ளி மாணவர்களை ஏற்றி வரும் வாகனங்களில் பெண் உதவியாளர் நியமிக்கப்பட வேண்டும், சி.சி.டி.வி கேமரா பொருத்தப்பட்டு காட்சிகள் சேகரிக்கப்பட்டு காவல்துறையிடம் வழங்கப்பட வேண்டும், கனரக வாகன ஓட்டுநர் உரிமத்துடன் 10 ஆண்டு அனுபவமுள்ள ஓட்டுநரையே பள்ளி வாகனம் இயக்க நியமிக்க வேண்டும்…. பள்ளி வாகனங்களில் மாணவியர்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவதாக வரும் புகாரையடுத்து தனியார் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு.

*இலங்கை கடற்படையால் கடந்த மாதம் பிடித்துச் செல்லப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 25 பேரில் 24 பேரை விடுவித்து ஊர்க்காவல் துறை திமன்றம் உத்தரவு…. ஒருவருக்கு மட்டும் ஆறுமாதம் சிறைத் தண்டணை விதிப்பு.

*தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ஆம் தேதி வாக்குப் பதிவு முடிவடைந்த பிறகு கோடைக்கால சுற்றுப் பயணம் மேற்கொள்ள பலரும் திட்டம் … சென்னையில் இருந்து பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் விமானங்களின் கட்டணம் இரண்டு மடங்கு அதிகரிப்பு.

*ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சோனியா காந்தி பதவி ஏற்பு .. மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் வாழ்த்து.

*ஐ.பி.எல். போட்டிகளில் ஐதராபாத் அணிக்காக விளையாடும் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் 33- வது பிறந்த நாள் கொண்டாட்டம் … ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் அஜித் பங்கேற்று நடராஜனுக்கு கேக் ஊட்டி வாழ்த்து.

*தமிழகத்தில் ஏப்ரல் 8- ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரித்தே காணப்படும். கர்நாடகா, கேரளா கடலோரப் பகுதிகளிலும் 5 நாட்களுக்கு அதிக வெப்பநிலை நீடிக்கும்…. வடக்கு உள் கர்நாடகா, ஒடிசா, மேற்குவங்கம், ஆந்திரா மாநிலங்களிலும் வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல்.

*பத்துக்கும் அதிகமான இடங்களில் வெயில் நூறு சதவிகிதத்தை தாண்டியது … ஈரோட்டில் அதிக பட்சமாக 107 டிகிரி பாரண் ஹீட் வெப்பம் பதிவு, கரூரில் 104 டிகிரி பாரன் ஹீட்.

தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *