தலைப்புச் செய்திகள் (15-01-2024)

*ஜனவரி 22- ஆம் தேதி நடைபெற உள்ள அயோத்தி ராமா கோயில் குடமுழுக்கு விழாவுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 21 -ஆம் தேதி திருவரங்கம் மற்றும் ராமேஸ்வரத்துக்கு வர உள்ளதாக தகவல் … இரண்டு இடங்களிலும் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு.

*மதுரை மாவட்டத்தில் முதல் ஜல்லிக்கட்டு போட்டியான அவணியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 817 காளைகள் அவிழ்ப்பு …. காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை ஐந்து மணி வரை நடைபெற்ற போட்டியில் 435 மாடு பிடி வீராகள் பங்கேற்பு.

*அவணியாபுரத்தில் பத்து சுற்றுகளாக நடத்தப்பட்ட போட்டியில் கார்த்திக் என்ற இளைஞர் 17 காளைகளை பிடித்து முதல் இடம் பெற்றதால் கார் பரிசு … யாராலும் அடக்க முடியாத காளையின் உரிமையாளருக்கும் ரூ 10 லட்சம் மதிப்புள்ள நிசான் கார் அன்பளிப்பு.

*அவணியாபுரத்தை தொடர்ந்து பாலமேட்டில் நாளை ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த விரிவான ஏற்பாடு … நாளை மாறுதினம் பெரிய அளவில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவதற்கு தயாராகிறது அலங்காநல்லூர்.

*தமிழர்கள் வாழும் இடம் எங்கும் பொங்கல் பண்டிகை வழக்கமான பாரம்பரியத்துடன் கொண்டாட்டம் … வீட்டு வாசலில் பொங்கல் வைத்து கதிரவனுக்கு படையல்.

*பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுக நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து … ஏராளமானவர்கள் புத்தகங்களை முதல்வருக்கு பரிசாக அளிப்பு.

*தமிழ்நாட்டு மக்கள் மீது துளியும் அக்கறை இல்லாத அரசாக திமுக அரசு திகழ்வதாக எடப்பாடி பழனிசாமி புகார் .. திமுக ஆட்சியில் புதிய திட்டங்கள் இல்லை என்றும் ஓமலூர் அருகே திண்டமங்களத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் விமர்சனம்.

*எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மீனவர்கள் பத்து பேரை கைது செய்தது இலங்கை கடற்படை … அனைவரையும் இலங்கை கொண்டு சென்று விசாரணை.

*மராட்டியத்தில் ஏக் நாத் ஷிண்டே தலைமையில் உள்ளதுதான் உண்மையான சிவசேனா என்று சபாநாயகர் அறிவித்த தீர்ப்புக்கு எதிர்ப்பு …. உத்தவ் தாக்ரே சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு.

*நாடாளுமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தங்களுடன் இணைந்து போட்டியிட வேண்டும் என்று இந்தியா கூட்டிணி வைத்த கோரிக்கையை நிராகரித்தார் மாயாவதி … தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவிப்பு

*டெல்லியில் இருந்து கோவா செல்ல வேண்டிய இன்டிகோ விமானம் பனி மூட்டம் காரணமாக 13 மணி நேரம் தாமதமாக புறப்பட்டதால் ஆத்திரம் … தாமதம் பற்றிய அறிவிப்பை வெளியிட்ட அனுப்குமார் என்ற விமானியை கட்டாரியா என்ற பயணி கன்னத்தில் அறைந்ததால் போலீசில் புகார்.

*ஞாயிற்றுக் கிழமை நிலவிய கடுமையான பனி மூட்டம் காரணமாக டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் விமானங்களை தாமதமாக இயக்க நேரிட்டதாக மத்திய விமானத் துறை அமைச்சர் ஜோதிராத்யா சிந்தியா விளக்கம் … விமானியை பயணி தாக்கியது, ஏற்க முடியாத செயல் என்றும் கண்டனம்.

*டெல்லியில் இருந்து மும்பைக்கு ஞாயிற்றுக் கிழமை புறப்பட வேண்டிய ஏர் இ்ந்தியா விமானம் 17 மணி நேரம் தாமதம் … உணவு கூட கிடைக்காமல் பல மணி நேரம் காத்துக்கிடந்த தங்களை விமான நிறுவனம் கண்டு கொள்ளவில்லை என்று பயணிகள் சரமாரி புகார்.

*சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்கான பாஸ்ட் டேக் கணக்குக்கு ஆதார் உள்ளிட்ட அடையாள ஆவணங்களை கொடுத்து புதுப்பித்துக் கொள்ள வேண்டும் … ஜனவரி 31 – ஆம் தேதிக்குள் புதுப்பிக்கத் தவறினால் கணக்கை இழக்க நேரிடும் என்று தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் விளக்கம்.

*சண்டிகர் மாநகராட்சி மேயர் பதவிக்காக ஜனவரி 18- ஆம் நடை பெற உள்ள தேர்தலில் காங்கிரசும் ஆம் ஆத்மி கட்சியும் கூட்டாக சேர்ந்து போட்டியிட முடிவு … நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு கட்சிகளும் கூட்டணி சேர்ந்து போட்டிடுவதற்கு சண்டிகர் முன்னோடி.

*சபரிமலையில் பொன்னம்பல மேட்டில் தெரிந்த மகர விளக்கை லட்சம் பக்தர்கள் தரிசனம் … நிலக்கல், பம்பை உட்பட அனைத்து இடங்களிலும் பக்தர்கள் வெள்ளம் போல திரண்டு நின்று வழிபாடு.

*செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தால் உலகம் முழுவதும் 40 சதவிகித வேலை வாய்ப்புகள் பாதிக்கும்… அதிக திறன் வாய்ந்த வேலைகளில் அதிக பாதிப்பு இருக்கும் என்றும் சர்வதேச நிதியத்தின் இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா கருத்து

*ரஜினி நடித்து வரும் வேட்டையன் படத்தின் புதிய போஸ்ட்டரை வெளியிட்டது படக்குழு … ஞானவேல் இயக்கும் வேட்டையனுக்கு இசை அனிருத்.

*தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் … ஓரிரு இடங்களில் பனிப்பொழிவு அதிகம் இருக்கக் கூடும் என்றும் வானிலை மையம் தகவல்.

தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *