May 19,2023
6 நாள்கள்… 3 நாடுகள் சுற்றுப்பயணத்தை இன்று தொடங்குகிறார் பிரதமர் மோடி!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று தொடங்கி வரும் 24-ம் தேதி வரை ஆறு நாள்கள் ஜப்பான், பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் அழைப்பின்பேரில் அந்த நாட்டின் ஹிரோஷிமா நகரில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதற்காக இன்று புறப்பட்டு ஜப்பானுக்குச் செல்லும் பிரதமர் மோடி, ஜி7 நாடுகளின் தலைவர்கள் மற்றும் ஜப்பான் பிரதமருடன் இரு தரப்புச் சந்திப்புகளை நிகழ்த்துவார் எனக் கூறப்படுகிறது.
மூன்று நாள் ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி, பப்புவா நியூ கினியா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு 22-ம் தேதி அந்த நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மராப்பேயுடன் இணைந்து இந்திய பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக்கான உச்ச மாநாட்டில் கலந்துகொள்வார். அதைத் தொடர்ந்து அன்றைய தினமே பிரதமர் மோடி ஆஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெறும் குவாட் நாடுகளின் உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். இந்த ஆஸ்திரேலியா பயணத்தின்போது ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானிஸ் தலைமையில் நடைபெறும் குவாட் மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோரும் பங்கேற்கஇருக்கின்றனர். இந்தப் பயணத்தின்போது ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸுடன் இருதரப்புச் சந்திப்பை நடத்தும் மோடி, 23-ம் தேதி சிட்னி நகரில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இந்திய வம்சாவளி மக்களுடன் உரையாற்றுகிறார். அதன் பின்னர் ஆறு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியாவுக்குத் திரும்புவார் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.