500 மதுக்கடைகள் மூடல் அறிவிப்போடு போனதா? – அன்புமணி கேள்வி..

may 21, 2023

தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகள் மூடல் அறிவிப்போடு போனதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார். உடனடியாக மதுக்கடைகளை மூட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 5329 மதுக்கடைகளில் 500 கடைகள் மூடப்படும் என்று கடந்த ஏப்ரல் 12-ஆம் நாள் தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அறிவித்தார். அதன்பின் இன்றுடன் 40 நாட்கள் ஆகும் நிலையில், இன்று வரை 500 மதுக்கடைகளை மூடுவதற்கான அறிகுறிகள் கூட தென்படவில்லை. அதனால், மதுக்கடைகளை மூடும் அறிவிப்பு அறிவிப்பாகவே முடிந்து விடுமோ? என்ற கவலை ஏற்படுகிறது.

சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டவாறு மதுக்கடைகள் மூடப்படாதது ஏன்? என்று வினாக்கள் எழுப்பப்படும் போதெல்லாம், மூடப்பட வேண்டிய மதுக்கடைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக மட்டும் தான் பதில் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகள் எங்கெங்கு உள்ளன? ஒவ்வொரு கடையின் வருவாய் எவ்வளவு? எவையெல்லாம் குடியிருப்புப் பகுதிகளில் உள்ளன? எந்தெந்த மதுக்கடைகளையெல்லாம் மூட வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்? என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்களும் ஆவணமாக்கப்பட்டுள்ளன. டாஸ்மாக் நிர்வாகம் நினைத்தால் அவற்றை ஆய்வு செய்து ஒரு மணி நேரத்தில் மூடப்பட வேண்டிய மதுக்கடைகளின் பட்டியலை தயாரித்து விடலாம். ஆனாலும், டாஸ்மாக் நிர்வாகம் இந்த விவகாரத்தில் தள்ளாடுவதன் காரணம் புரியவில்லை.

தமிழ்நாட்டில் 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் முறையே 500, 500 மதுக்கடைகள் மூடப்பட்டன. 2016-ஆம் ஆண்டில் அறிவிப்பு வெளியானதிலிருந்து 27 நாட்களில் மதுக்கடைகள் மூடப்பட்டன. 2017-ஆம் ஆண்டில் நான்கே நாட்களில் 500 மதுக்கடைகள் மூடப்பட்டன. அப்போது இருந்த மதுக்கடைகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது இப்போதுள்ள மதுக்கடைகளின் எண்ணிக்கை குறைவு. அதனால், மூடப்படும் கடைகளின் பட்டியலை இன்னும் விரைவாக தயாரிக்க முடியும். ஆனாலும், 40 நாட்களாகியும் இதுவரை கடைகள் மூடப்படாதது ஏன்?..

மதுக்கடைகள் மூடப்படுவதால் பயன்விளைய வேண்டும் என்றால், அதிக மது விற்பனையாகும் கடைகள், குடியிருப்பு பகுதிகளில் உள்ள கடைகள், பள்ளிகளுக்கு அருகிலுள்ள கடைகள் போன்றவற்றிலிருந்து 500 கடைகளை உடனடியாக மூட வேண்டும். இவற்றை அடையாளம் காண்பது கடினமல்ல.  தமிழக அரசு கோரினால் அடுத்த 24 மணி நேரத்தில் இந்த பட்டியலை தயாரித்து வழங்க பாட்டாளி மக்கள் கட்சி தயாராக உள்ளது. எனவே, இனியும் தாமதிக்காமல்  அடுத்த  3 நாட்களுக்குள் 500 மதுக்கடைகளையும் மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *