20 மாநிலங்களில் 91 எப்.எம். ரேடியோ நிலையங்கள்- திறந்துவைத்த பிரதமர் மோடி

ஏப்ரல்.29

இந்தியாவில் ஆந்திரா, கேரளா உள்ளிட்ட 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் 91 எப்.எம். ரேடியோ நிலையங்களை பிரதமர் நரேந்திரமோடி திறந்துவைத்தார்.

ஆந்திரா, கேரளா, மராட்டியம் உள்பட 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 84 மாவட்டங்களில் புதிதாக எப்.எம்.ரேடியோ நிலையங்கள் நிறுவப்பட்டன. எல்லைப்புற பகுதிகள் மற்றும் மிகவும் உட்புற பகுதிகளில் இந்த நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், 3ஆயிரத்து 500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு ஒலிபரப்பு சேவை கிடைப்பதோடு, 2 கோடிக்கு மேற்பட்டோர் இந்த எப்.எம். வானொலி சேவையை பயன்படுத்த முடியும்.

இந்த 91 எப்.எம்.வானொலியின் தொடக்க விழா நிகழ்ச்சியில், அந்தந்த மாநிலங்களின் முதலமைச்சர்கள் கலந்துகொண்டனர். லடாக்கில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்குர் கலந்து கொண்டார். பிரதமர், வானொலியில் நடத்தி வரும் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியின் 100-வது நிகழ்ச்சி நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் நிலையில், இந்தப் புதிய 91 எப்.எம். நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

திறப்பு விழா நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், எப்.எம். நிலையங்கள், உரிய நேரத்தில் தகவல்களை கொண்டு சேர்ப்பதிலும், வானிலை முன்னறிவிப்பு வெளியிடுவதிலும், மகளிர் சுயஉதவி குழுக்களை புதிய சந்தைகளுடன் இணைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கும். தொழில்நுட்ப புரட்சி, எப்.எம். ரேடியோக்களையும், ரேடியோக்களையும் புதிய வழியில் வடிவமைக்க உதவி செய்துள்ளது. ரேடியோக்கள் வழக்கொழிந்து போகவில்லை. ஆன்லைன் எப்.எம். மூலமாக புதிய அவதாரம் எடுத்துள்ளது.

நான் வானொலியில் 100-வது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியை நடத்த போகிறேன். வானொலியை தவிர, வேறு எந்த ஊடகம் மூலமாகவும் நான் மக்களுடன் இந்த அளவுக்கு ஆழ்ந்த தொடர்பு கொள்ள முடியாது. கிராமங்களில்கூட கண்ணாடி இழைகள் பதிக்கப்பட்டதால், மொபைல் போன் விலையும், டேட்டா விலையும் குறைந்துள்ளது. எங்கு பார்த்தாலும் டிஜிட்டல் தொழில்முனைவோர் பெருகி விட்டனர்.

நடைபாதை வியாபாரிகள்கூட யு.பி.ஐ. சேவையை பயன்படுத்துகிறார்கள். நாட்டின் மூலை முடுக்கெல்லாம் மக்களுக்கெல்லாம் தொழில்நுட்பம் மலிவான விலையில் கிடைக்க மத்திய அரசு பாடுபட்டு வருகிறது. டி.டி.எச்.சில் கூட கல்வி படிப்புகள் அளிக்கப்படுகின்றன. எப்.எம். வானொலியும், டி.டி.எச்.சும் டிஜிட்டல் இந்தியாவின் எதிர்காலத்துக்கான ஜன்னலை திறந்துவிட்டுள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *