130+ தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை….. ஆட்சி அமைக்க நாளை உரிமை கோர உள்ள காங்கிரஸ்!

May 13,2023

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படும் கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுகள் இன்று காலை வெளியாகின்றன. காங்கிரஸ், பாஜக நேரடியாக போட்டிக் களத்தில் இருக்கின்றன. மொத்தம் 224 தொகுதிகளில் 113 தொகுதிகளை கைப்பற்றினால் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கலாம்.

காங்கிரஸ் கட்சி இந்த முறை மீண்டும் அரியணையில் ஏற வேண்டும் என்ற முனைப்பில் ராகுல் காந்தி, பிரிங்கா காந்தி, சிவக்குமார், சித்தராமையா, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் மாநிலம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். அதேபோல் அம்மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜகவும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டது. பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் தொகுதிவாரியாக பிரச்சாரம் மேற்கொண்டனர். மதச்சார்பற்ற ஜனதா தளமும் தங்களுக்கு பலமாக இருக்கும் தொகுதிகளில் களம் கண்டது.

இந்நிலையில் இப்போது வெளியாகியிருக்கும் தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களுக்கும் அதிகமாக இப்போது வரை முன்னிலையில் இருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி காங்கிரஸ் கட்சி 130 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்ட நிலையில், நாளை ஆட்சி அமைக்க உரிமை கோர திட்டமிட்டுள்ளது. முன்னதாக மல்லிகார்ஜூனா கார்கே தலைமையில் மூத்த தலைவர்கள் மற்றும் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் ஆலோசனை  நடத்துகின்றனர். அதன்பிறகு ஆட்சி அமைக்க உரிமை கோர காங்கிரஸ் முடிவெடுத்திருக்கிறது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *