தமிழக சட்டப்பேரவையில் 12 மணி நேர வேலை மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு, எதிர்க்கட்சிகள் மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த மசோதாவுக்கு கண்டனம் தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இச்சட்டத்தை எதிர்த்து தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது என்றும், பேரவையில் நிறைவேற்றிய தொழிற்சாலைகள் திருத்தச் சட்டத்தை ஆளுநரில் ஒப்புதலுக்கு அனுப்பாமல் நிறுத்தி வைத்து, அதனைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
12 மணி நேர வேலை மசோதாவுக்கு கண்டனம் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த மசோதாவை எந்த வகையிலும் ஏற்க முடியாது என்றும், 150 ஆண்டுகளுக்கும் மேலாக தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமையை தமிழ்நாடு அரசாங்கம் நெகிழ்வுத்தன்மை என்ற ஒன்றைச்சொல்லி அதை இல்லாமல் செய்வது தவறான நடவடிக்கை, தவறான முன்னுதாரணம் எனவும், மாற்ற முடியாத பழிச்சொல்லுக்கு தமிழ்நாடு அரசு ஆளாக நேரிடும் என்றும் கூறியுள்ளார்.
மே தினம் வரும் வேளையில், தொழிலாளர்களின் நலன் காக்கும் வகையில் செய்தியை வெளியிட வேண்டுமே தவிர தொழிலாளர்களுக்கு எதிரான செயல்பாட்டில் ஈடுபடுவது தமிழக அரசுக்கு உகந்ததல்ல என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
சம்பளத்துக்காக அதிக நேரம் உழைப்பது என்ற மனோ நிலையை உருவாக்குவது மனித உரிமைக்கும், நலனுக்கும் எதிரானதல்லவா என்று கேள்வி எழுப்பி இருக்கும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விரும்பியோர் 12 மணிநேரம் உழைக்கலாம் என்று கூறுவது, ஒருவகை உழைப்புச் சுரண்டலே என்று தெரிவித்துள்ளார்.
தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் எந்த சட்டமும் தமிழகத்தில் இருக்கக்கூடாது. இதை உணர்ந்து 12 மணி நேர பணிச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார்.
ஒன்றிய அரசின் பரிந்துரையைச் செயல்படுத்தும் முயற்சியாக சட்டமன்றத்தில் 65ஏ சட்டத் திருத்த முன்வரைவு நிறைவேற்றப்பட்டு இருப்பது ஏற்கத்தக்கது அல்ல என்றும், உழைப்புச் சுரண்டலுக்கு வழிவகுக்கும் சட்ட முன்வரைவை திரும்பப் பெற வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார். 8 மணி நேரம் வேலை என்பதை 12 மணி நேரம் என அதிகரித்துக் கொண்டு, தொழிற் நிறுவனங்கள் தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டலுக்கு இச்சட்டம் சட்டபூர்வ அங்கீகாரத்தை அளித்துவிடும் என்பது அவரின் கருத்து.