திரை உலக மார்க்கண்டேயன் என அழைக்கப்படுபவர் சிவகுமார். 1965 ஆம் ஆண்டு வெளியான காக்கும் கரங்கள் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கிய இந்த படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் நாயகனாக நடிக்க, முக்கிய கேரக்டரில் சிவகுமார் நடித்திருந்தார்.
அடுத்தடுத்து மோட்டார் சுந்தரம் பிள்ளை, தாயே உனக்காக, சரஸ்வதி சபதம் உள்ளிட்ட படங்களில் நடித்த சிவகுமாருக்கு 5-வது படமாக அமைந்தது கந்தன் கருணை.
இந்த படத்தில் அவர் முருகனாக நடித்திருந்தார். இதில் நடிப்பதற்காக, அவர் தனது பல்லை தியாகம் செய்த விஷயம் தெரியுமா? தெரிந்து கொள்வோம்.
ஏ.பி.நாகராஜன் இயக்கிய இந்த படத்தில் முருகன் வேடத்தில் நடிக்க நடிகர்கள் தேர்வு நடப்பதை தெரிந்துகொண்ட சிவகுமார் அங்கு சென்றார். அவருக்கு மேக்கப் டெஸ்ட் எடுக்கப்பட்டது.
முருகன் வேடத்துக்கு அவர் கச்சிதமாக பொருந்தி இருந்தார். சிவகுமாரிடம் ‘’நான் சொல்லி அனுப்புகிறேன்’ என்று ஏ.பி.நாகராஜன் கூறினார்.
ஆனால் அவரிடம் இருந்து சிவகுமாருக்கு எந்த தகவலும் வரவில்லை.சில நாட்கள் கழித்து நடிகர் அசோகனை சந்தித்த போது , சிவகுமாருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது
முருகன் வேடத்திற்கு சிவகுமாரை தேர்வு செய்வதில் ஏ.பி.நாகராஜனுக்கு தயக்கம் இருந்தது. அவருக்கு இருந்த சிங்கப்பல் தான் பிரச்சினை.இதை அறிந்த சிவகுமார், உடனடியாக அந்த பல்லை எடுத்துவிட்டு,ஏ.பி.நாகராஜனை சந்தித்தார்.
‘’நீங்கள் சொன்ன மறுநாளே நான் சிங்கப்பல்லை எடுத்துவிட்டேன்’ என்று சிவகுமார் சொல்ல,நாகராஜனுக்கு மகிழ்ச்சி. ஓகே சொல்லி விட்டார்.
இப்படியாக, தனது பல்லை இழந்து கந்தன் கருணை படத்தில் நடிக்க வாய்ப்பு பெற்றார், சிவகுமார்.