ரூ.2000 நோட்டுகளை வங்கிகளில் இன்று முதல் மாற்றலாம் – 50 ஆயிரத்திற்கும்மேலான டெபாசிட்டுக்கு பான் எண் அவசியம் என ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு

மே.23

நாடு முழுவதும் 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை இன்று முதல் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம். அதேநேரத்தில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்தால் பான் எண் அவசியம் என ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்கு பிறகு 2,000 ரூபாய் நோட்டு செல்லாது என ரிசர்வ் வங்கி அண்மையில் அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, புழக்கத்தில் இருந்து 2ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்படுவதாகவும், பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 30ம் தேதி வரை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் எனவும் தெரிவித்திருந்தது.

மேலும், 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகளைப் போல் 2,000 ரூபாய் நோட்டுக்கள் பணமதிப்பிழப்பு செய்யப்படவில்லை என்றும், அவை திரும்ப மட்டுமே பெற்றப்படுதவாகவும் ரிசர்வ் வங்கி கூறியிருந்தது. அதேபோல், இந்த 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் வரவு வைப்பது என்பது வழக்கமாக வரவு வைப்பது போன்றதே என்றும், அதில் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை என்றும் அறிவித்திருந்தது.

இந்நிலையில், இன்று (மே.23) முதல் செப்டம்பர் 30 தேதி வரை பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்று ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நபர் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ. 20,000 வரை (10 நோட்டுகள்) வரை மாற்றி கொள்ளலாம் எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ், இந்த 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதால், பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்பு மிக மிக குறைவாகவே இருக்கும். 2,000 ரூபாய் நோட்டுகளில் பெரும்பாலானவை, செப்டம்பர் 30-ந் தேதிக்குள் கருவூலத்துக்கு வந்து விடும் என்று கருதுகிறோம். அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் தேவைக்கு அதிகமாக கையிருப்பில் உள்ளன. ரிசர்வ் வங்கியிடம் மட்டுமின்றி, வங்கிகளின் பண அறைகளிலும் அவை உள்ளன. எனவே, கவலைப்பட தேவையில்லை. 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் பொதுமக்கள் படும் சிரமங்களை அறிவோம். வங்கிகள் போதிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். தேவைப்பட்டால், ஒழுங்கு விதிமுறைகள் வெளியிடப்படும்.

வங்கி கணக்கில் ரூ.50 ஆயிரம் அல்லது அதற்கு மேல் டெபாசிட் செய்தால், வருமானவரி தேவைக்காக ‘பான்’ எண்ணை குறிப்பிடுவது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. தற்போது 2,000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி, ரூ.50 ஆயிரம் டெபாசிட் செய்வதற்கும் அந்த விதிமுறை பொருந்தும் என்றும் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *