ராஜஸ்தான் காங்கிரஸில் முட்டும் உட்கட்சி மோதல்; அசோக் கெலாட்டை `நண்பர்’ எனக் கூறிய மோடி..!

காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டும் அடிக்கடி பொதுவெளியில் தெரியுமளவுக்கு மோதி வருகின்றனர். அண்மையில் கூட, ராஜஸ்தானில் கடந்த பா.ஜ.க ஆட்சியின்போது நிகழ்ந்த ஊழல்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை, முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.

இந்த ஆண்டு இறுதியில் மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் சொந்தக் கட்சிக்குள்ளேயே இவ்வாறு மோதல் அரங்கேறுவது காங்கிரஸுக்கு தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தும் எனப் பலரும் கூறுகின்றனர். இந்த நிலையில் பிரதமர் மோடி, அசோக் கெலாட்டை `நண்பர்’ எனக் குறிப்பிட்டு பேசுயிருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியிருக்கிறது.

முன்னதாக ஜெய்ப்பூர் டு டெல்லி வரையிலான ராஜஸ்தானின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை காணொலி காட்சி மூலம் மோடி இன்று கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அசோக் கெலாட்டும் கலந்து கொண்டார். அதோடு அசோக் கெலாட், “சில கோரிக்கைகள் நிலுவையில் இருக்கின்றன. பன்ஸ்வாரா, டோங்க், கரௌலி ஆகிய மூன்று மாவட்டங்கள், மாவட்டத் தலைமையகமாக இருந்தாலும் ரயில்வே இணைப்பு இல்லை” என மோடியிடம் கோரிக்கை வைத்தார்.

பிறகு காணொலி காட்சி மூலம் பேசிய மோடி, “முதலில் அசோக் கெலாட்டுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அரசியல் நெருக்கடிகள் உட்பட பல பிரச்னைகள் இருந்தபோதிலும், குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி ரயில்வே வளர்ச்சிப் பணிகளுக்கு வந்திருக்கிறார். அவரை வரவேற்கிறேன்.

சுதந்திரம் கிடைத்தவுடனேயே செய்யவேண்டிய பணிகள் இன்றுவரை செய்யப்படவில்லை. என்மீது நம்பிக்கை வைத்து இன்று என்முன் இந்த கோரிக்கையை வைத்திருக்கிறீர்கள். இந்த நம்பிக்கையே நம் நட்பின் பலம். எனவே ஒரு நண்பராக என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *