ராகுல் காந்திக்கு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்த சூரத் நீதிபதி ஹரிஷ் ஹஸ்முக்பாய் வர்மாவின் பதவி உயர்வை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2019ம் ஆண்டும் லலித் மோடி, நிரவ் மோடி, நரேந்திர மோடி என திருடர்கள் அனைவருக்கு பின்னாலும் மோடி என்ற பெயர் உள்ளது என ராகுல் காந்தி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் மாவட்ட நீதிபதி ஹரிஷ் ஹஸ்முக்பாய் வர்மா உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதனிடையே இரண்டு ஆண்டுகள் தண்டையை எதிர்த்து ராகுல் காந்தி குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த நிலையில், ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்த நீதிபதி ஹரிஷ் ஹஸ்முக்பாய் வர்மாவுக்கு மாவட்ட தலைமை நீதிபதியாக பதவி உயர்வு வழங்கப்பட்டது.
இதனிடையே சூரத் நீதிபதி ஹரிஷ் ஹஸ்முக்பாய் வர்மாவுக்கு மாவட்ட தலைமை நீதிபதியாக பதவி உயர்வு வழங்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ராகுல் காந்திக்கு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்த சூரத் நீதிபதி ஹரிஷ் ஹஸ்முக்பாய் வர்மாவின் பதவி உயர்வை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.