ரவுடிகள் வீட்டை விட்டு வெளியே வர பயப்படுகிறார்கள்…. யோகி ஆதித்யநாத்!

ஏப்ரல் 19

“உத்தரபிரதேசத்தில் தற்போது ரவுடிகள் வீட்டை விட்டு வெளியே வரவே பயந்து நடுங்குகிறார்கள்.. இனி எந்தவொரு தொழிலதிபரையும், தொழில் நிறுவனங்களையும் மிரட்ட கூட ரவுடிகள் துணிய மாட்டார்கள்” என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.

உத்தரபிரதேசத்தில் மிகப்பெரிய ரவுடியாக வலம் வந்த அடிக் அகமது போலீஸார் முன்னிலையிலேயே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர வைத்தது. அதற்கு இரு தினங்களுக்கு முன்புதான் அடிக் அகமதின் மகன் ஆசாத், போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அவரது உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்வதற்காக அடிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரஃப் ஆகியோரை நேற்று முன்தினம் போலீஸார் அழைத்து வந்தனர்.

இறுதிச்சடங்கு முடிந்து அவர்களை மீண்டும் சிறைக்கு கொண்டு செல்லப்படும் போது அங்கிருந்த செய்தியாளர்கள், அடிக் அகமதை சூழ்ந்து கொண்டு கேள்வியெழுப்பிய வண்ணம் இருந்தனர். அப்போது அங்கு 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் இருந்தனர். இந்நிலையில், அந்தக் கூட்டத்தில் இருந்த திடீரென வெளியே வந்த 3 பேர், ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பியபடியே அடிக் அகமதைதும், சகோதரர் அஷரஃபையும் சுட்டுக் கொன்றனர். போலீஸார் கண் முன்பே நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அடிக் அகமது சுட்டுக்கொல்லப்பட்டதன் மூலம் உத்தரபிரதேசத்தில் ஒரு மிகப்பெரிய ரவுடி சாம்ராஜ்ஜியமே முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், லக்னோவில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:

உத்தரபிரதேசம் என்றாலே ஒரு காலத்தில் ரவுடிகளின் சாம்ராஜ்யம் நிரம்பி இருந்தது. குறிப்பாக, சமாஜ்வாதி கட்சியின் ஆட்சிக்காலத்தில் கொலையும், பலாத்காரமும் சர்வ சாதாரணமாக நடைபெற்று வந்தன. உபியில் யாரும் தொழில் செய்ய முடியாத நிலை இருந்தது. யாரேனும் தொழில் நிறுவனங்களை தொடங்கினால், கோடிக்கணக்கில் ரவுடிகளுக்கும், அரசாங்கத்துக்கும் பணம் தர வேண்டிய கட்டாயம் இருந்தது. இதனால் உபி என்றாலே தொழிலதிபர்களும், முதலாளிகளும் அலறியடித்து ஓடினர்.

ஆனால் இப்போதோ நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. ரவுடிகள்தான் தற்போது தொழிலதிபர்களை கண்டு பயந்து ஓடுகிறார்கள். ரவுடிகள் யாரேனும் பணம் கேட்டு மிரட்டினால், அடுத்த நாளே அந்த ரவுடிக்கு என்ன கதி ஏற்படும் என அனைவருக்கும் தெரியும்.

இனி தொழில்முறை கிரிமினல்களோ, ரவுடி மாஃபியாவோ தொழிலதிபர்களை மிரட்ட மாட்டார்கள். அந்த துணிச்சல் அவர்களுக்கு வராது. வீட்டை விட்டு வெளியே வரவே ரவுடிகள் பயப்படுகிறார்கள். சமாஜ்வாதி ஆட்சிக்காலத்தில் 2012 முதல் 2017 வரை 700 வன்முறைகள் நடைபெற்றன. ஆனால், பாஜக ஆட்சியில் உள்ள இந்த 8 ஆண்டுகளில் ஒரு வன்முறைச் சம்பவம் கூட நடைபெறவில்லை. இதுதான் பாஜக சொல்லும் சட்டத்தின் ஆட்சி. உத்தரபிரதேசத்தில் நிலவும் இந்த அமைதியான சூழலை தொழில் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு யோகி ஆதித்யநாத் பேசினார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *