மேகதாது அணை விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட ராமதாஸ் வேண்டுகோள்!

May 31, 2023

 

மேகதாது அணை கட்டும் நடவடிக்கையில் கர்நாடக அரசு ஈடுபடுவதாக அறிவித்துள்ள நிலையில் அனைத்துக் கட்சியை கூட்ட வேண்டும் என்று தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேகதாது அணை கட்டுவதற்காக கர்நாடக அரசின் புதிய முயற்சிகளை தமிழக அரசு விழிப்புடன் இருந்து முறியடிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடகத்தின் புதிய நீர்ப்பாசனத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள, அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை எப்பாடு பட்டாவது கட்டியே தீர வேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு ஆணையிட்டிருக்கிறார். மேகதாது அணை தொடர்பான பணிகளை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அதற்கு எதிரான கர்நாடக அரசின் நிலைப்பாடு கண்டிக்கத்தக்கதாகும்.

கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், அத்துறையின் அதிகாரிகளுடன் கலந்தாய்வு நடத்திய சிவக்குமார், “2018 ம் ஆம் ஆண்டில் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து நான் விலகியதிலிருந்து இப்போது வரை மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அத்திட்டத்திற்காக ஏற்கனவே ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதைக் கொண்டு நிலம் கையகப்படுத்தும் பணிகள் எதையும் ஏன் செய்யவில்லை. மேகதாது திட்டத்திற்கு உடனடியாக மத்திய அரசின் அனுமதியை பெற வேண்டும். மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஷெகாவத் மிகவும் நல்லவர். அவரது உதவி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் இதை சாதிக்க வேண்டும். தேவைப்பட்டால் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை நாம் சந்திப்போம்” என்று கூறியுள்ளார்.

மேகதாது அணையை கட்டுவதில் கர்நாடக அரசு எவ்வளவு தீவிரமாக உள்ளது என்பதற்கு நீர்ப்பாசனத் துறையின் முதல் கூட்டத்திலேயே அது குறித்து விவாதிக்கப்பட்டிருப்பது தான் சான்று ஆகும். மேகதாது அணை சிக்கலில் கர்நாடக அரசும், அம்மாநில துணை முதலமைச்சர் சிவக்குமாரும் இவ்வளவு தீவிரம் காட்டுவது எந்த வகையிலும் வியப்போ, அதிர்ச்சியோ அளிக்கவில்லை. ஏனெனில், இதற்கு முன் பாசனத் துறை அமைச்சராக பதவி வகித்த போதும் மேகதாது அணையை கட்டுவதில் சிவக்குமார் தீவிரம் காட்டினார்; அவர் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பிறகு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கொரோனா தடைகளையும் மீறி மேகதாது அணை கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி, இன்றைய முதலமைச்சர் சித்தராமையாவுடன் இணைந்து நடைபயணம் மேற்கொண்டார்; அதன் தொடர்ச்சியாக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

மேகதாது அணையை கட்டுவதில் கர்நாடக அரசு எவ்வளவு தீவிரமாக உள்ளது என்பதற்கு நீர்ப்பாசனத் துறையின் முதல் கூட்டத்திலேயே அது குறித்து விவாதிக்கப்பட்டிருப்பது தான் சான்று ஆகும். மேகதாது அணை சிக்கலில் கர்நாடக அரசும், அம்மாநில துணை முதலமைச்சர் சிவக்குமாரும் இவ்வளவு தீவிரம் காட்டுவது எந்த வகையிலும் வியப்போ, அதிர்ச்சியோ அளிக்கவில்லை. ஏனெனில், இதற்கு முன் பாசனத் துறை அமைச்சராக பதவி வகித்த போதும் மேகதாது அணையை கட்டுவதில் சிவக்குமார் தீவிரம் காட்டினார்; அவர் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பிறகு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கொரோனா தடைகளையும் மீறி மேகதாது அணை கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி, இன்றைய முதலமைச்சர் சித்தராமையாவுடன் இணைந்து நடைபயணம் மேற்கொண்டார்; அதன் தொடர்ச்சியாக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

மேகதாது அணை விவகாரத்தை தேர்தல் பரப்புரையாக மாற்றிய கர்நாடக காங்கிரஸ் கட்சி, ஆட்சிக்கு வந்த பின் அத்திட்டத்தை செயல்படுத்த ஆர்வம் காட்டுவதைக் கண்டு அதிர்ச்சியடைய முடியாது. ஆனால், காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையையும், தமிழக உழவர்களின் நலன்களையும் காக்க தமிழக அரசு என்ன செய்யப் போகிறது? என்பது தான் இப்போது விடை தேடப்பட வேண்டிய வினா ஆகும்.

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தாலும், பாரதிய ஜனதா ஆட்சி செய்தாலும் காவிரியில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்கக்கூடாது; காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்ட வேண்டும் என்பது தான் நோக்கமாகவும், கொள்கையாகவும் இருந்திருக்கிறது. முந்தைய பாரதிய ஜனதா ஆட்சியின் போது மத்திய அரசின் துணையுடன், மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கைக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் ஒப்புதல் பெறுவதற்கு முயற்சிகள் நடைபெற்றன. அதற்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி தான் முதல் குரலை எழுப்பியது; உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வலியுறுத்தியது. அதன் தொடர்ச்சியாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் தான் மேகதாது அணை குறித்து விவாதிக்க காவிரி ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அத்தடையை அகற்றும் முயற்சிகளில் கர்நாடகம் ஈடுபட்டிருக்கிறது; இதை தமிழக அனுமதிக்கக்கூடாது.

மேகதாது பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது. கர்நாடக அரசு ஏற்கனவே தயாரித்துள்ள விரிவான திட்ட அறிக்கையின்படி, மேகதாது அணை மொத்தம் 12,979 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படவுள்ளது. அதில் 12,345.40 ஏக்கர் பகுதியில் நீர் தேக்கி வைக்கப்படும். நீர்த்தேக்கப்பகுதிகளில் சுமார் 11,845 ஏக்கர் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதி ஆகும். இதனால் சுற்றுச்சூழலுக்கு சரி செய்ய முடியாத அளவுக்கு பாதிப்புகள் ஏற்படும். அதனால், இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி தர முடியாது

அதுமட்டுமின்றி, கர்நாடகத்தில் காவிரி மற்றும் துணை நதிகளின் குறுக்கே இப்போதுள்ள அணைகளின் கொள்ளளவு 104.59 டிஎம்சி ஆகும். இவ்வளவு கொள்ளளவுள்ள அணைகள் இருக்கும் போதே கர்நாடக அரசு தமிழகத்துக்கு தண்ணீர் தருவதில்லை. 67.14 டிஎம்சி கொள்ளளவுள்ள மேகதாது அணையும் கட்டப்பட்டால் கர்நாடக அணைகளின் கொள்ளளவு 171.73 டிஎம்சியாக அதிகரிக்கும். மேட்டூர் அணை கொள்ளளவை விட கிட்டத்தட்ட இரு மடங்கு தண்ணீரை கர்நாடகம் தேக்கி வைத்தால் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்காது. காவிரி படுகை வறட்சியால் பாதிக்கப்பட்டு பாலைவனமாகிவிடும்.

எனவே, மேகதாது அணை கட்டுவதற்காக கர்நாடக அரசின் புதிய முயற்சிகளை தமிழக அரசு விழிப்புடன் இருந்து முறியடிக்க வேண்டும். அதற்கான சட்ட, அரசியல் சார்ந்த நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *