எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்தப்படும் என்றும் கூட்டத்தின் தேதி மற்றும் இடம் 1 முதல் 2 நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்தார்.
பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதிஷ் குமார், மத்திய பா.ஜ.க. அரசை ஆட்சியில் இருந்து அகற்றும் நோக்கில் 2024 மக்களவை தேர்தலுக்கு முன்னாக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். நிதிஷ் குமார் நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது, காங்கிரஸின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் லாலன் சிங் ஆகியோரும் உடன் இருந்தனர். இந்த சந்திப்பு முடிவடைந்த பிறகு கே.சி. வேணுகோபால் செய்தியாளர்களிடம் பேசுகையில், எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்தப்படும். கூட்டத்தின் தேதி மற்றும் இடம் 1 முதல் 2 நாட்களுக்குள் அறிவிக்கப்படும். கூட்டத்தில் ஏராளமான கட்சிகள் பங்கேற்கும் என்று தெரிவித்தார்.
முன்னதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே டிவிட்டரில், இனி நாடு ஒன்றுபடும். ஜனநாயகத்தின் பலமே நமது செய்தி. ராகுல் காந்தியும் நானும் இன்று பீகார் முதல்வர் நிதிஷ் குமாருடன் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதித்தோம். மேலும் நாட்டிற்கு புதிய திசையை வழங்குவதற்கான செயல்முறையை முன்னெடுத்தோம் என்று பதிவு செய்து இருந்தார்.