மல்யுத்த வீராங்கனைகளின் குரலை மிதிக்கிறது மத்திய அரசு – பிரியங்கா கண்டனம்..

May 29, 2023

மல்யுத்த வீரர்களின் குரல் நசுக்கப்படுவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்ய வலியுறுத்தி மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம் சாட்டும் அவர்கள், ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் போராட்டம் நடத்தினர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மீண்டும் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றதை ஒட்டி, டெல்லியில் போராட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், தடையை மீறி மல்யுத்த வீரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று கைது செய்தனர். இதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அந்தவகையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பதிவில், “மல்யுத்த வீரர்களின் மார்பில் இருக்கும் பதக்கங்கள் நம் நாட்டின் பெருமை. அந்த பதக்கங்களாலும், விளையாட்டு வீரர்களின் கடின உழைப்பாலும் நாட்டின் கவுரவம் அதிகரிக்கிறது. பாஜக அரசின் ஆணவம் அதிகமாகிவிட்டதால், நமது பெண் வீராங்கனைகளின் குரலை அரசு இரக்கமின்றி மிதித்து வருகிறது. இது முற்றிலும் தவறு. அரசின் திமிரையும், அநீதியையும் முழு நாடும் பார்த்துக் கொண்டிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *