மே 17,2023
மதுவிலக்கு தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போராட தயார் என்றால், அவருடன் இணைந்து நாங்களும் போராட தயார் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியர்குப்பத்தில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை அதே கிராமத்தை சேர்ந்தவர்கள் வாங்கி குடித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், அனைவரும் முண்டியம்பாக்கம் மற்றும் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், கள்ளச்சாராயம் குடித்து ஆபத்தான நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், விழுப்புரம் எம்.பி.ரவிக்குமார், சிந்தனை செல்வன் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், அரசு அனுமதி பெற்ற டாஸ்மாக் கடை திறந்திருக்கும்போதே கள்ளச்சாராய புழக்கம் இந்த அளவுக்கு இருந்துள்ளது பெரும் அதிர்ச்சியை தருகிறது. குடியிருப்புகளுக்கு சென்றே விநியோகம் செய்யக்கூடிய நிலை இருந்திருக்கிறது. மதுவிலக்கு தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எத்தனை போராட்டங்கள் செய்துள்ளார் என கேள்வி எழுப்பினார்.
மேலும், இபிஎஸ் போராட தயார் என்றால், அவருடன் இணைந்து போராட நாங்களும் தயார். மதுவிலக்கிற்கு எதிராக கூட்டணி கட்சியினர் நாங்களும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இதுபோன்ற அசம்பாவித சம்பவங்களை தடுக்க, மதுவிலக்கை உடனே நடைமுறைப்படுத்த முடியாது என்றாலும், மதுவிலக்கை தமிழ்நாடு அரசு படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.