“போலி செய்தி வெளியிடுபவர்கள், என்னுடைய நல்ல புகைப்படத்தையாவது பயன்படுத்துங்கள்” – கிருத்திகா உதயநிதி ட்வீட்

May 28, 2023

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அறக்கட்டளைக்கு சொந்தமான வங்கிக் கணக்கில் இருந்த 34 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. என்னைப் பற்றி தவறான தகவல் மற்றும் போலிச் செய்திகளை பரப்பு நபர்களுக்கு ஒரு வேண்டுகோள், குறைந்த பட்சம் ஒரு நல்ல புகைப்படத்தையாவது பயன்படுத்துங்கள் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா தெரிவித்துள்ளார்.

பிரபல படத்தயாரிப்பு நிறுவனமான லைகா புரோடக்‌ஷன்ஸின் துணை நிறுவனத்திடம், கல்லல் குழும நிறுவனம் 114 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், 300 கோடி ரூபாய் வரை முறைகேடுகள் நடந்திருப்பது அம்பலமானது. இதனைதொடர்ந்து லைகா நிறுவனம் மற்றும் கல்லல் குழும நிறுவனங்களில் கடந்த மாதம் 27ஆம் தேதி மற்றும் மே மாதம் 16 ஆகிய தேதிகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.

இதில் பணமோசடி தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் அமலாக்கத்துறை வசம் சிக்கின. இதனைதொடர்ந்து மோசடி செய்த பணத்தை முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டபோது, உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை, கல்லல் குழுமத்திடம் இருந்து 1 கோடி ரூபாய் பெறப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்பின்னர் கல்லல் குழுமத்திற்கு சொந்தமான சுமார் 36 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினின் அறக்கட்டளைக்கு சொந்தமான வங்கிக் கணக்கில் இருந்த 34 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை அமலாக்கத்துறை முடக்கியது.

இந்நிலையில், அமலாக்கத் துறை செய்திக் குறிப்பில் , M/S Udhayanidhi stalin Foundation என்ற இடம்பெற்றிருந்ததை கிருத்திகா உதயநிதியின் வங்கிக் கணக்கு என்று சமூக ஊடகங்களும் , செய்தி இணையதளங்களும் வெளியிட்டன. M/s என்பது ஒரு நிறுவனத்தை குறிப்பதற்காக முன்னோட்டமாக பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், கிருத்திகா உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் , ” என்னைப் பற்றிய தவறான தகவல் மற்றும் போலிச் செய்திகளை பரப்பு நபர்களுக்கு ஒரு வேண்டுகோள், குறைந்த பட்சம் ஒரு நல்ல புகைப்படத்தையாவது பயன்படுத்துங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

கிருத்திகா உதயநிதியின் இந்த ட்வீட்டை , ரீ ட்வீட் செய்த உதயநிதி ஸ்டாலின், சிரிக்கும் எமோஜி ஒன்றையும் பதிவு செய்து, கலாய்க்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *