பொன்னியின் செல்வன் ஆஸ்கருக்குப் போகுமா ?

பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றி மேலும் பல வரலாற்றுப் படங்களின் வெற்றிக்கு முன்னோட்டமாக இருக்க வேண்டும் என்று விரும்புவதாக இயக்குநர் மணிரத்னம் தெரிவித்து உள்ளார். அவருடைய இயக்கத்தில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன்-2 பாகம் இந்த மாதம் 28-ம் தேதி திரைக்கு வருகிறது. இதனை விளம்பரப் படுத்தும் உத்தியுடன் படக்குழுவினரின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் இயக்குநர் மணிரத்னம், நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா உட்பட பலர் பங்கேற்றனர்.

அப்போது கனவு நிறைவடைந்து விட்டதா ? என்ற கேள்விக்குப் பதிலளித்த மணிரத்னம்,
தன்னுடைய கனவு பாதி அளவுதான் நிறைவடைந்து உள்ளது என்றார்.

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் வைத்து தனித் தனி படங்களை உருவாக்கலாம் என்று சொன்ன மணிரத்னம் அந்த அளவுக்கு கல்கியின் படைப்பில் சுவாரசியம் இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

பொன்னியின் செல்வனைப் போல வரலாற்றுப் படங்கள் பல அடுத்தடுத்து வரும் என்று நம்புவதாகவும் அவர் சொன்னார்.

பொன்னியின் செல்வன் முதல் படத்தின் வசூல் குறித்த கேள்விக்கு, தனக்கு தொடர்ந்து படம் எடுக்க ஆசை உள்ளது, அதனால் வசூல் நிலவரம் பற்றிய கணக்கு எதற்கு? என்று அவர் கேட்டார்.

பல வரலாற்று படங்களுக்கு இந்த படத்தின் வெற்றி ஒரு துவக்கமாக இருக்கும் என்று நம்புவதாகவும் மணிரத்னம் தெரிவித்தார்.

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் கமல் குரல் இருந்தது போன்று 2-ம் பாகத்தில் அவர் குரல் உள்ளதா என்ற கேள்விக்கு, படத்தில் கமலின் குரல் கண்டிப்பாக இருக்கிறது என்று பதிலளித்தார்.

முதல் பாகத்தில் பாடல்களுக்கு நடனம் இருந்ததைப் போன்று 2-ம் பாகத்தில் இடம் பெற்று உள்ள பாடல்களுக்கு நடனம் இருக்காது, கதையோட பின்னணியில்தான் பாடல்கள் இருக்கும் என்று இயக்குநர் தெரிவித்தார். ஏ.ஆர். ரகுமான் பின்னணி இசை நன்றாக அமைத்து கொடுத்துள்ளதாகவும் மணிரத்னம் மகிழ்ச்சிப் பொங்க தெரிவித்தார்.

கமலஹாசன் உடன் இணைந்து அடுத்து படத்தை இயக்க முடிவு செய்துள்ள நீங்கள் அதற்கு அடுத்தப் படத்தில் ரஜினி காந்துடன் இணைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, வாய்ப்பு இருந்தால் இணைவோம் என்றார் மணிரத்னம். மேலும் ரஜினி சாருடன்‌ படம் செய்வது மகிழ்ச்சியானதாக இருக்கும் என்று சொன்ன போது அவருடைய முகம் பூரிப்பில் பொங்கியது.

தொடர்ந்துப் பேசிய இயக்குநர் ,
சு. வெங்கடேசனின் வேள்பாரி நாவலை தம் நண்பர் எடுக்கப் போகிறார், அதைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன் .
பொன்னியின் செல்வன் உருவாக்க மிகப்பெரிய திட்டமிடல் இருந்தது
RRR படம் ஆஸ்கார் விருது வென்றது பெருமையான செய்தி. பொன்னியின் செல்வன் படத்தை ஆஸ்கார் விருதுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. மக்களிடம் கொண்டு செல்வதே எங்கள் நோக்கம் என்றார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *