”பெண் குழந்தைகளைக் காப்போம் என்பது பாஜகவின் வெற்றுப் பிரச்சாரம்” – ஜந்தர் மந்தர் சம்பவத்தை முன்வைத்து ராகுல் விமர்சனம்

தலைநகர் டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சூழலில், வீராங்கனைகளை நேற்றிரவு போலீஸார் கையாண்ட விதத்துக்கு காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனை சுட்டிக்காட்டி ‘பாஜகவின் பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் என்ற முழக்கம் வெற்று கோஷம், கேலிக்கூத்து மட்டுமே’ என்று அவர் விமர்சித்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் வீராங்கனைகள் சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத் ஆகியோருடன் போலீஸார் கைகலப்பில் ஈடுபட்ட வீடியோவைப் பகிர்ந்த ராகுல் காந்தி, “பாஜக எப்போதும் இந்தியாவின் மகள்கள் துன்புறத்தப்படுவதைக் கண்டு வருந்தியதில்லை. விளையாட்டு வீராங்கனைகள் மீதான இந்த அத்துமீறல் அவமானகரமானது. பெண்களைப் பாதுகாபோம் என்ற பாஜக முழக்கம் வெற்று கோஷம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி, நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய மல்யுத்த வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டம் இன்று 12-வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில் நேற்று (புதன்கிழமை) இரவு சில மல்யுத்த வீரர்கள் மடக்கு கட்டில்களை போராட்டக் களத்துக்கு கொண்டுவர முயன்றபோது டெல்லி போலீஸாருக்கும், வீரர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. குடிபோதையில் இருந்த போலீஸ் ஒருவர், தவறாக நடக்க முயன்றார் என்று வீராங்கனைகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்நிலையில்தான் ராகுல் காந்தி பாஜகவின் பேட்டி பச்சாவோ முழக்கத்தை விமர்சித்துள்ளார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *