பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும் அவரது கட்சியான ஐக்கிய ஜனதா தளமும் மாநிலத்தில் செயல்படும் மது மாபியாவிடம் இருந்து ரூ.10 ஆயிரம் கோடி வாங்கியுள்ளதாக அம்மாநில பா.ஜ.க. தலைவர் சாம்ராட் சவுத்ரி குற்றம் சாட்டியுள்ளார்.
பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகா கூட்டணியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பீகாரில் 2016ம் ஆண்டு முதல் மதுவிலக்கு அமலில் உள்ளது. இருப்பினும், அங்கு திருட்டுத்தனமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது நடந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், முதல்வர் நிதிஷ் குமாரும் அவரது கட்சியான ஐக்கிய ஜனதா தளமும் மாநிலத்தில் செயல்படும் மது மாபியாவிடம் இருந்து ரூ.10 ஆயிரம் கோடி வாங்கியுள்ளதாக எதிர்க்கட்சியான பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.
பீகார் பா.ஜ.க. தலைவர் சாம்ராட் சவுத்ரி இது தொடர்பாக கூறியதாவது: பீகாரில் மதுபானங்கள் ஹோம் டெலிவரி மூலம் அதிகமாக இருந்தது. மாநிலத்தில் செயல்படும் மது மாபியா நிதிஷ் குமாருக்கும், ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கும் ரூ.10 ஆயிரம் கோடி வழங்கியுள்ளது. இது மாநிலத்தில் ரூ.10 ஆயிரம் கோடி ஊழல். அரசு மதுபான மாபியாவுடன் கூட்டு சேர்ந்து, மாநிலத்தில் மது விற்பனையில் ஈடுபட்டு, அதன் மூலம் கிடைக்கும் வருமானம் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு செல்கிறது.
2024ல் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று 2025ல் பீகாரிலும் ஆட்சி அமைக்கும். பா.ஜ.க.வில் உள்ள ஒரு சாதாரண தொண்டன் கூட மாநிலத்தின் முதல்வராக முடியும். நிதிஷ் குமாரை விட அவர் சிறந்த தேர்வாக இருப்பார் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இப்போது, வேறு எந்த அரசியல் கட்சியின் தலைவரும் முதல்வராக வருவதற்கு பா.ஜ.க. உதவாது. மாநிலத்தில் பா.ஜ.க. தனது சொந்த அரசாங்கத்தை அமைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.