பி.எஸ்.ஜி கல்லூரியில் தென்னிந்திய குறும்பட விழா- சினிமா பிரபலங்கள் பங்கேற்பு

கோவையில் பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தென்னிந்திய அளவிலான குறும்பட விழா நடைபெற்றது. இதில், திரைப்பட இயக்குநர் சுசீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவிற்கு கல்லூரி முதல்வர் டி.பிருந்தா தலைமை வகித்தார். கல்லூரி துணை முதல்வர் ஏ.அங்குராஜ் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, பாண்டிய நாடு போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் சுசீந்திரன் கலந்துகொண்டார். விழாவில் பேசிய சுசீந்திரன், எனது முதல் குறும்படத்தை 2003-ம் ஆண்டு இயக்கினேன். ஆனால், அப்போது அந்தக் குறும்படத்தை திரையிடுவதற்கான வாய்ப்பு என‌க்கு கிடைக்கவில்லை. ஆனால், தற்போது விஷுவல் கம்யூனிகேஷன் பயிலும் மாணவர்கள், இத்தகைய விழாவில் தங்களின் குறும்படங்களை திரையிடுகின்றனர். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. ஒவ்வொரு மாணவனும், தனது முதல் முயற்சியில் எடுக்கும் குறும்படத்தை பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டும். காலப்போக்கில், உங்களின் திறன் எப்படி மேம்பட்டு இருக்கிறது என்பதை கணிக்கும் அளவுக்கோலாக முதல் குறும்படம்தான் அமையும்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், என்னுடன் சேர்த்து, சுமார் ஆயிரம் பேர் உதவி இயக்குநர்களாக சினிமா பயணத்தை துவங்கினர். ஆனால், தற்போது அவர்களில் 50 பேர்தான் சினிமாத் துறையில் நிலைத்து நிற்கிறார்கள். பல்வேறு இன்னல்களை கடந்தால்தான், சினிமாத்துறையில் வெற்றி என்பது சாத்தியமாகும். ஆனால், தற்போது ஓடிடி தளம் உதவி இயக்குநர்களின் களமாக மாறிவிட்டது. பெரும்பாலான உதவி இயக்குநர்கள் ஓடிடி தளத்தை முறையாக பயன்படுத்தி, பல்வேறு வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்.

சினிமாதுறை மட்டுமல்ல, மீடியாத் துறை சார்ந்த எந்தத் தொழிலை மாணவர்கள் தேர்ந்தெடுத்தாலும், முதலில் அவற்றை நேசியுங்கள். நாள்தோறும் அந்தத் தொழிலோடு, உங்களின் பொழுதை கழியுங்கள். பிறக்கும்போதே யாரும் திறமைசாலியாக பிறப்பதில்லை. புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொண்டு, திறன்களை மெருக்கேற்றிக் கொள்ள வேண்டும். தொழில்நுட்பங்கள் தினந்தோறும் மாறிக் கொண்டே வருகிறது. அவற்றுக்கேற்ப மாணவர்கள் தங்களின் அறிவை தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *