ரபேல் வாட்ச் பில் - வானதி சீனிவாசன் பதில்

பில் தானே கேட்டீங்க.. சீரியல் நம்பர் கேட்டீங்களா? – பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கேள்வி

ஏப்ரல்.15

அண்ணாமலையின் ரபேல் வாட்ச் பில் குறித்து கோவையில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பாஜக எம்.எல். ஏ வானதி சீனிவாசன், பில் தானே கேட்டீர்கள்..அது வந்ததா இல்லையா?.. சீரியல் நம்பர் கேட்டீர்களா? எனக் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெற்கு தொகுதிக்குட்பட்ட திருக்கோவில்கள் மேம்பாட்டிற்காக “ஆலயம்” எனும் திட்டத்தை தொடங்கி வைத்தார். காந்திபுரம் சித்தாபுதூர் பகுதியிலுள்ள மதுரை வீரன் கோவிலில், இத்திட்டத்தை தொடங்கி வைத்த அவர், முதற்கட்டமாக சுமார் 20 கோவில்களுக்கு தலா 5 லிட்டர் தீப எண்ணெயை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், தெற்கு தொகுதிக்குட்பட்ட அனைத்து கோவில்களுக்கும் மாதம் ஐந்து லிட்டர் தீப எண்ணெய் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கோவில்களை ஒருங்கிணைக்கும் தன்னார்வ குழு உருவாக்கப்பட்டுள்ளது. தொகுதியிலுள்ள 20 கோவில்களுக்கு மாதம் தோறும் தீப எண்ணெய் வழங்குவது உட்பட கோவில் பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ளவும் தீர்மானித்துள்ளோம்.

கோவிலில் பூ கட்டும் பெண்களுக்கு அரசின் திட்டங்களைப்பெற்று தரவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு ஊரிலும் கல்வி சாலையைப்போல் கோவில்களும் முக்கியம். நிறைய இடங்களில் கோவில்களுக்கு வருமானம் இல்லாத நிலையில், பூஜை முறைகளிலிருந்து விலகிச் செல்வதால் அவர்களுக்கு உதவும் வகையில் இந்த ஆலயம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. எந்த சூழலிலும் கோவில்களில் விளக்கேற்றாமல் இருக்க கூடாது என்பதற்காக இப்பணியை தொடங்கியுள்ளோம். வருங்காலத்தில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ஊழல் பட்டியல் மக்கள் மன்றத்தின் முன்பாக விவாத பொருளாக உள்ளது. தமிழக அரசியலில் விவாதத்தை மாநில தலைவர் வைத்துள்ளார். எதையும் சந்திக்க தயார் எனக் கூறி, திமுக தலைவர்களின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டுள்ள நிலையில், நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம் என திமுகவினர் நாடினால் அதையும் சந்திக்க பாஜக தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, அண்ணாமலையின் ரஃபேல் வாட்ச் பில் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு வானதி சீனிவாசன், பில் கேட்டீர்கள் பில் வந்ததா இல்லையா? பில் கேட்டீர்கள், பில் சீரியல் நம்பர் கேட்டீர்களா? எனக் கேள்வி எழுப்பினார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *