சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நடைபெற்ற திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி பாஜகவிடம் அதிமுக அடிமையாக இருப்பது போல இல்லாமல் ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்பு கொடுத்து விட்டுக்கொடுத்து சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்று அறிவுரை கூறி வாழ்த்தியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் நடைபெற்ற திமுக கட்சி நிர்வாகிகளின் திருமண விழாக்களில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். மேலும், குன்றக்குடி மடத்திற்குச் சென்று பொன்னம்பல அடிகளாரைச் சந்தித்து ஆசி பெற்றார்.
தொடர்ந்து, குன்றக்குடி அடிகளார் மணிமண்டபத்திற்குச் சென்று அடிகளார் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார். அதனைத்தொடர்ந்து, மணிமண்டபத்தைப் பொன்னம்பல அடிகளாருடன் இணைந்து பார்வையிட்டார். அப்போது, மணிமண்டபத்திற்குக் கலைஞர் அடிகல் நாட்டியதையும் அவரே திறந்து வைத்தற்கான கல்வெட்டைப் பொன்னம்பல அடிகளார் சுட்டிக்காட்டி விளக்கினார். மேலும் பெரியாருக்கும் கலைஞருக்கும் இருந்த நெருக்கமான நட்பு குறித்தும் அங்கிருந்த புகைப்படங்களைக் காண்பித்து விளக்கினார்.
இதனைத்தொடர்ந்து, குன்றக்குடியில் திமுக கல்லல் மேற்கு ஒன்றிய செயலாளர் இல்ல மணவிழாவில் பங்கேற்று பவித்ரன், கிருஷ்ணவேணி திருமணத்தை உதயநிதி நடத்தி வைத்தார். அப்போது பேசிய அவர், ’இந்தியாவிற்கே சிறந்த மாடலாக இந்த திராவிட மாடலை நமது முதல்வர் எடுத்துச் சென்று கொண்டிருக்கிறாரோ. அதுபோல மணமக்கள் உற்றார் உறவினர்களுக்கு ஒரு நல்ல மணமக்களாக, திராவிட மாடல் அரசு போல ஒரு நல்ல மாடலாக திருமண வாழ்க்கை அமைய வேண்டும் என்று வாழ்த்தினார்.
தொடர்ந்து, தேவகோட்டையில் நடைபெற்ற திமுக நிர்வாகி வேளச்சேரி ஆனந்தன் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டார். அங்கு மணமக்களை வாழ்த்திப் பேசிய அவர், ’மணமக்கள் வாழ்க்கையில் விட்டுக் கொடுத்தும் அடிமையாக இல்லாமல் சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்றார். மேலும், ”பாஜகவிடம் அதிமுக அடிமையாக இருப்பது போல் இல்லாமல், எடப்பாடியா? ஓபிஎஸ்ஸா? என குழாயடி சண்டையாக இல்லாமல், ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்பு கொடுத்து விட்டுக் கொடுத்து சுயமரியாதையுடன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன் என்று பேசினார்.
இந்த திருமணத்தில் குன்றக்குடி பொன்னம்பலம் அடிகளார், கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி , மருத்துவம் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் ம. சுப்பிரமணி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி மற்றும் முன்னாள் அமைச்சர் மு.தென்னவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.