பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை: கோடை வெயிலால் அரசு எடுத்த முடிவு!

கோடை வெயில் காரணமாக ஒடிசாவில் நாளை முதல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் கோடை விடுமுறையை நாளை (ஏப்ரல் 21ஆம் தேதி) முதல் தொடங்குவதாக அம்மாநில அரசு இன்று அறிவித்துள்ளது. முன்னதாக மே 5ஆம் தேதி முதல் விடுமுறைவிடப்படுவதாக இருந்தது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், முதல்வரின் தனிச் செயலாளர் வி.கே.பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த அறிவிப்பை பதிவிட்டுள்ளார்.

“தற்போது நிலவும் வெப்ப அலை நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, அனைத்துப் பள்ளிகளுக்கும் (அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும்) 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறையை நாளை (ஏப்ரல் 21 ஆம் தேதி) முதல் தொடங்க ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவுறுத்தியுள்ளார். விரிவான செய்திக்குறிப்பு விரைவில் வெளியாகும்,” என்று இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களில் ஒடிசா முழுவதும் கோடை வெயில் கொடூரமாக அடித்து வருகிறது. மாநிலத்தில் 30 இடங்களில் நேற்று (புதன்கிழமை) அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் பதிவாகியுள்ளது. மாநிலத்தில் அதிகபட்சமாக பரிபாடாவின் 44.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

அதிகரித்து வரும் வெப்பநிலையைக் கருத்தில் கொண்டு ஒடிசா மாநில அரசு ஏப்ரல் 12 முதல் 16 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தது. ஏப்ரல் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் மீண்டும் திறக்கப்பட்ட பின்னர், ஏப்ரல் 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன.

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெயில் கொடுமையால் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏப்ரல் 22 ஆம் வரை வெப்ப அலை வீசும் என்றும் அதன் பிறகு வெப்பநிலை சிறிது குறையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *