மே.23
பசிபிக் தீவு நாடான பப்புவா நியூகினியா நாட்டிற்குச் சென்ற பிரதமர் நரேந்திரமோடி, அந்நாட்டின் அலுவல் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை அந்நாட்டு பிரதமருடன் சேர்த்து கூட்டாக வெளியிட்டார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு கடந்த 19-ந் தேதி சுற்றுப்பயணத்தை தொடங்கினார். முதலில் ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகருக்கு சென்ற வஅர், ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரேசில் அதிபர் லுலா டா சில்வா உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.
அதைத் தொடரந்து, நேற்று முன்தினம் இரவு பசிபிக் தீவு நாடான பப்புவா நியூகினியாவுக்கு பிரதமர் மோடி சென்றார். இந்திய பிரதமர், பப்புவா நியூகினியா நாட்டிற்கு செல்வது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. அந்நாட்டின் மோர்ஸ்பி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, டோக் பிசின் (அந்நாட்டின் அலுவல்மொழி) மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட ‘திருக்குறள்’ நூலை பப்புவா நியூகினியா பிரதமர் ஜேம்ஸ் மரப்புடன் இணைந்து கூட்டாக வெளியிட்டார்.
இந்த நூலை மொழிபெயர்த்த தமிழர்களான வெஸ்ட் நியூ பிரிட்டன் மாகாண கவர்னர் சசிந்திரன், அவருடைய மனைவி சுபா சசிந்திரன் ஆகியோருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு பிஜி தீவின் உயரிய விருதான ‘கம்பேனியன் ஆப் தி ஆர்டர் ஆப் பிஜி’ என்ற விருதை பிஜி பிரதமர் சிதிவேனி ரபுகா வழங்கி கவுரவித்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்திய மக்களுக்கும், இந்தியா-பிஜி தீவு இடையிலான விசேஷ உறவுக்கு முக்கிய பங்கு வகித்த பிஜி தீவுவாழ் இந்தியர்களுக்கும் இந்த விருதை அர்ப்பணிப்பதாக கூறினார். அதைத்தொடர்ந்து, பப்புவா நியூகினியா நாட்டின் உயரிய விருதான ‘கிராண்ட் கம்பேனியன் ஆப் தி ஆர்டர் ஆப் லோகோகு’ என்ற விருதை பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு கவர்னர் ஜெனரல் சர் பாப் டாடே வழங்கினார். பசிபிக் தீவு நாடுகளின் ஒற்றுமைக்கு பாடுபட்டதற்காக பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.