நெல்லை துலுக்கர்பட்டியில் 2-ம் கட்ட அகழாய்வு பணி – மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

நெல்லை மாவட்டம் துலுக்கர்பட்டியில் 2ம் கட்ட அகழாய்வுப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று தொடங்கி வைத்தார்.

தொல்லியல் துறை சார்பாக 2023-24 ஆண்டில் தமிழ்நாட்டில் 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதில் நெல்லை மாவட்டத்தில் உள்ள துலுக்கர்பட்டி கிராமமும் அடங்கும். ராதாபுரம் தாலுகாவில் உள்ள துலுக்கர்பட்டி கிராமம் நம்பி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. இந்த தொல்லியல் மேடானது விளாங்காடு என்றழைக்கப்படுகிறது. இவ்வாழ்வியல் மேடானது, சுமார் 2.5 மீ உயரம், 36 ஏக்கர் பரப்பளவில் விரிந்து காணப்படுகிறது. இந்த தொல்லியல் தளமானது சிவகளை, ஆதிச்சநல்லூருக்கு சமமான கால கட்டமாகும்.

இந்த துலுக்கர்பட்டியில 2-ம் கட்ட அகழாய்வு பணியினை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் இன்று தொடங்கி வைத்தார். சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் டாக்டர் சந்தர மோகன் மற்றும் தொல்லியல் துறை ஆணையர் சிவானந்தம் வழிகாட்டு தலின்படி, அகழாய்வு இயக்குநர் வசந்தகுமார், அகழாய்வு இணை இயக்குனர் காளீஸ்வரன், தலைமையில் அகழாய்வு பணி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஆனைகுளம் ஒன்றிய வார்டு கவுன்சிலர் ரைகானா ஜாவித், பஞ்சாயத்து தலைவர் அசன், அரசு ஒப்பந்ததாரர் ஷேக், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் கார்த்திகேயன், தமிழகத்தின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் வரலாற்று காலம் வரையிலான தொல்லியல் இடங்களில் அகழாய்வு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, பண்டையத் தமிழ் சமூகத்தின் தொன்மை, பண்பாடு மற்றும் விழுமியங்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த ஆண்டு 8 இடங்களில் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டு, பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன.

தாமிரபரணி ஆற்றங்கரையில் வாழ்ந்த தமிழ் சமூகத்தினரின் மேம்பட்ட பண்பாடு 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று உறுதி செய்ய கூடுதல் சான்றுகளைத் தேடி அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 11.2.2022 பொருநை ஆற்றின் ஈடாக நம்பியார் படுகையிலும் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 8 மாதங்கள் நடைபெற்ற இந்த அகழாய்வில், 17 குழிகள் அமைக்கப்பட்டு இதுவரை 109 தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வெள்ளி முத்திரைக் காசுகள், செம்பிலான பொருட்கள், இரும்பில் ஆன பொருட்கள், சுடு மண்ணால் ஆன பொம்மை, சுடுமண்ணால் ஆன விளையாட்டு பொருட்கள், நீலக்கல் கண்ணாடி மணிகள், பளிங்கு கல்மணிகள் ஆகியவை முக்கிய தொல்பொருட்கள் ஆகும். தமிழில் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளும் கண்டறியப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து 2-ம் கட்டமாக அகழாய்வு பணிகள் தொடங்கின. இந்த அகழாய்வின் குறிக்கோள் செறிவுமிக்க இத்தொல்லியல் தளத்தின் உருவாக்கம், குடியேற்ற முறை மற்றும் தொல் பொருட்களின் தன்மை ஆகியவற்றை கண்டறிவது ஆகும். நம்பி ஆற்றங்கரையில் இரும்பு கால பண்பாட்டின் வேர்களைத் தேடுவதே இவ்வகழாய்வின் நோக்கமாகும். நம்பியாறு நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி இதே மாவட்டத்தில் ஆத்தங்கரை பள்ளிவாசலில் கடலில் கலக்கிறது. நெல்லை மாவட்டத்தின் நாங்குநேரி, ராதாபுரம் பகுதியில் சுமார் 45 கிலோமீட்டர் நீளமுடைய இந்த ஆற்றில் பழங்காலத்தில் பல வரலாற்று சிறப்புமிக்க சிவன் கோவில்கள் இருந்ததாகவும், பண்டைய மக்களின் வாழ்வியல் இடமாக சிறந்ததாகவும், பண்பாட்டுக் கூறுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன. இந்த நம்பியாறு படுகை பண்டைய தமிழர்களின் தொன்மையான நாகரீகத்தின் தொட்டில் ஆகவும், வியாபாரத் தளமாகவும், ஆன்மீக தலமாகவும் பல அரசர்கள் ஆட்சி செய்யும் இடமாகவும் திகழ்ந்துள்ளது. இதற்கு சான்றாகதான் இன்றும் இந்த பகுதியில் ராஜாக்கள் வாழ்ந்த இடம் ராஜாக்கமங்கலம் என்றும், தளபதிகள் வாழ்ந்த இடம் தளபதி சமுத்திரம் என்றும், இரணியன் என்ற அரசன் வாழ்ந்த இடம் இரணியன் குடியிருப்பு என்று பல தொல்லியல் சிறப்புடைய பகுதிகள் இங்கு அமைந்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *