இந்தியாவிலேயே மகிழ்ச்சியான மாநிலங்களின் பட்டியலில் மிசோரம் முதலிடத்தை பெற்றுள்ளது. இது குறித்து குருகிராமில் உள்ள மேனேஜ்மென்ட் டெவலப்மென்ட் இன்ஸ்டிடியூட் பேராசிரியர் ராஜேஷ் கே பிலானியா நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இந்தியாவிலேயே 100 சதவீத கல்வியறிவு பெற்ற இரண்டாவது மாநிலமான மிசோரம், மிகவும் கடினமான சூழ்நிலையிலும் மாணவர்கள் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்குவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. குடும்ப உறவுகள், வேலை தொடர்பான பிரச்சினைகள், சமூகப் பிரச்சினைகள் மற்றும் தொண்டு மனப்பாண்மை, மதம் ஆகிய அளவீடுகளின் படி மகிழ்ச்சி சதவிகிதம் கணக்கிடபட்டுள்ளது. மிசோரம் மாநிலம், ஐஸ்வாலில் உள்ள அரசு மிசோ உயர்நிலைப் பள்ளியின் (GMHS) மாணவன், சிறுவயதிலேயே தன் தந்தை தன் குடும்பத்தைக் கைவிட்டதால், பல சிரமங்களைச் சந்திக்க நேர்ந்தது. இருந்தபோதிலும், அவன் நம்பிக்கையுடன் இருந்து, படிப்பில் சிறந்து விளங்குகிறான். சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் அந்த மாணவன் முதல் முறை தேர்ச்சி பெறாமல் இருந்தாலும் அவனுக்கு அடுத்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.
“எங்கள் ஆசிரியர்கள் எங்களுடைய சிறந்த நண்பர்கள், அவர்களுடன் எதையும் பகிர்ந்து கொள்ள நாங்கள் பயப்படவோ வெட்கப்படவோ இல்லை” என்று மாணவர்கள் கூறுகின்றனர். மிசோரமில் உள்ள ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களை சந்தித்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கிறார்கள்.
மிசோரமின் சமூக அமைப்பும் அதன் இளைஞர்களின் மகிழ்ச்சிக்கு பங்களிக்கிறது. ” நாங்கள் சாதியற்ற சமூகமாக உள்ளோம். படிப்பிற்கான பெற்றோரின் அழுத்தம் இங்கு குறைவாக உள்ளது,” என்று தனியார் பள்ளியான எபென்-ஏசர் போர்டிங் பள்ளியின் ஆசிரியை லால்ரின்மாவி கியாங்டே கூறுகிறார். மிசோ சமூகத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தையும், பாலின வேறுபாடின்றி, சீக்கிரமே சம்பாதிக்கத் தொடங்குவதாக அந்த அறிக்கை கூறுகிறது.
“எந்தப் பணியும் மிகச் சிறியதாகக் கருதப்படுவதில்லை. இளைஞர்கள் பொதுவாக 16 அல்லது 17 வயதிற்குள் வேலைவாய்ப்பைப் பெறுகிறார்கள். இது ஊக்குவிக்கப்படுகிறது, மேலும் பெண்கள் மற்றும் சிறுவர்களிடையே பாகுபாடு இல்லை. இங்கு அனைத்து பிரிவினரும் சமமாக நடத்தப்படுகின்றனர். சாதி பிரச்சனைகள் இல்லாததால் இங்கு சமூக பிளவிற்கு வாய்ப்புகள் இல்லாமல் போனது. அதேபோல் பெண்களும் சமமாக மதிக்கப்படுகின்றனர்’’ என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.