திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் சொத்து பிரச்சனையில் தம்பி மனைவியை ஓடும் பேருந்தில் குத்திக்கொன்றுவிட்டு தப்பியோடிய அண்ணனை போலீசார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகிலுள்ள கணவாய்ப்பட்டி பங்களா பகுதியைச் சேர்ந்தவர் கோபி. திண்டுக்கல்லில் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கிருஷ்ணவேனி(வயது42). தனியார் தொண்டு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கோபிக்கும், அதே பகுதியில் வசித்து வரும் அவரது அண்ணன் ராஜாங்கத்துக்கும் இடையே 2 ஏக்கர் பூர்வீக சொத்தை பாகப் பிரிவினை செய்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. சொத்துப் பிரச்னை தொடர்பாக திண்டுக்கல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், வழக்குரைஞரை சந்திப்பதற்காக கிருஷ்ணவேனி திண்டுக்கல்லுக்கு தனியார் பேருந்தில் ஏறினார். அதே பேருந்தில் ராஜாங்கமும் தனது 14 வயது மகனுடன் ஏறினார். அந்தப் பேருந்து கோபால்பட்டி அடுத்துள்ள வடுக்கப்பட்டி அருகே வந்தபோது, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கிருஷ்ணவேனியை ராஜாங்கம் குத்தினார். இதனால், பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சியில் கூச்சலிட்டனர். உடனடியாக பேருந்தின் ஓட்டுநர் விஜய் பேருந்தை நிறுத்தினார். இதனிடையே ராஜாங்கம், மகனை விட்டுவிட்டு பேருந்திலிருந்து இறங்கி தப்பி ஓடினார்.
பலத்த காயமடைந்த ரத்த வெள்ளத்தில் கிருஷ்ணவேனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சாணார்பட்டி போலீஸார், சம்பவ இடத்துக்கு சென்று கிருஷ்ணவேனியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலை குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய குற்றவாளியைத் தேடிவருகின்றனர்.