தேனியில் ‘அரிக்கொம்பன்’ யானை தாக்கி காயமடைந்த நபர் – சிகிச்சை பலனின்றி பலி..!

மே.30

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் கடந்த 27ம் தேதி நுழைந்த அரிக்கொம்பன் யானை தாக்கியத்தில் காயமடைந்த பால்ராஜ் என்ற நபர், மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில், இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல், சாந்தம்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ‘அரிக்கொம்பன்’ என்ற காட்டு யானை வலம் வந்தது. இந்த யானை அங்குள்ள ஊருக்குள் புகுந்து 8 பேரை கொன்றதுடன், விளை நிலங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தால், கேரள வனத்துறையினர் அதனை கடந்த 29-ந்தேதி மயக்க ஊசிகள் செலுத்தி பிடித்து, தமிழக-கேரள எல்லையில் உள்ள பெரியாறு புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மேதக்கானம் வனப்பகுதியில் விட்டனர். மேலும் அந்த யானையின் கழுத்தில் ரேடியோ காலர் எனப்படும் ஜிபிஎஸ் கருவியை பொருத்தி, அதன் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி காலை ‘அரிக்கொம்பன்’ காட்டு யானை கம்பம் நகருக்குள் திடீரென்று நுழைந்தது. அப்போது வீதி, வீதியாக ஓடிய அரிக்கொம்பன் யானையால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர். அப்போது, பால்ராஜ் என்ற நபரை அரிக்கொம்பன் யானை தாக்கியது. இதில் காயமடைந்த அவர், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து, அதனை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இதற்காக நீலகிரி மாவட்டம் டாப்சிலிப், ஆனைமலை ஆகிய பகுதிகளில் இருந்து அரிசி ராஜா என்ற முத்து, சுயம்பு, உதயன் ஆகிய 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. அந்த 3 யானைகள் கம்பத்தில் கட்டிப்போடப்பட்டு தயார் நிலையில் வைத்து உள்ளனர். இருப்பினும், பொறியில் சிக்காமல், ஊர், ஊராக இடம்பெயர்ந்து அரிக்கொம்பன் யானை வனத்துறைக்கு போக்கு காட்டி வருகிறது. அந்த யானையை பிடிக்கவும் முடியாமல், விரட்டவும் முடியாமல் வனத்துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

இந்நிலையில், தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பால்ராஜ் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கேரளாவில் ஏற்கனவே 8 பேரை காவு வாங்கிய அரிக்கொம்பன் யானை, தமிழகத்திலும் ஒரு உயிரைப் பறித்துள்ளதோடு, வனத்துறையிடம் சிக்காமல் சுற்றித்திரிந்துவருவது கம்பம் பகுதி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும், பதற்றத்தையும் உருவாக்கியுள்ளது.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *