துபாய்க்கு கல்வி சுற்றுலா – கோவை திருநங்கை மாணவி தேர்வு

தனி நபர் நடிப்புப் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பிடித்து, துபாய் செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ள கோவையைச் சேர்ந்த திருநங்கை மாணவி அஜிதாவுக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வியைத் தாண்டி தங்கள் திறமையை வெளிப்படுத்தும் வகையில் பள்ளிக் கல்வித்துறை நுண்கலை, விளையாட்டு, அறிவியல், இசை, கலாச்சார நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை நடத்தி வருகிறது. இந்நிலையில், நடப்பு 2022-23ம் கல்வியாண்டில், சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு, சர்வதேச கல்வி சுற்றுப் பயணத்துடன், பரிசும் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அண்மையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

அதன்படி, 2022-23ஆம் கல்வியாண்டில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் ஒவ்வொரு வாரமும் இலக்கிய மன்றம், வினாடி-வினா போட்டி, சிறார் திரைப்படத் திரையிடல், ரெயின்போ கிளப் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மாணவர்களின் திறனைக் கண்டறிய பள்ளி, தொகுதி, மாவட்டம், மாநிலம் என பல்வேறு நிலைகளில் இலக்கிய மன்றம், வினாடி-வினா போட்டி, சிறுவர் திரைப்படத் திரையிடல், வானவில் மன்றம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.

மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் அந்தந்த மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டனர். மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெறுபவர்கள் வெளிநாட்டு கல்விச் சுற்றுலாவுக்கு தேர்வு செய்யப்பட்டுவருகின்றனர். அதுமட்டுமின்றி, மாநில அளவிலான கலைவிழா போட்டியில் முதலிடம் பெற்ற மாணவர்களும் இந்த சுற்றுப் பயணப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதன்படி கோவை மாவட்டத்தில் இருந்து ஒரு திருநங்கை உள்பட மொத்தம் 8 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கோவை வடகோவை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவி அஜிதா, இந்தக் கல்விச் சுற்றுலாப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இவர் தன்னை மூன்றாம் பாலினமாக (திருநங்கை) பதிவு செய்து கொண்டு பள்ளியில் கல்வி பயின்று வருகிறார்.கலைத்திருவிழா போட்டியில் தனி நபர் நடிப்பில் சிலப்பதிகாரத்தின் கண்ணகி வேடத்தில், அஜிதா மாநில அளவில் முதலிடம் பெற்றார். இதன் மூலம் துபாய்க்கு கல்வி சுற்றுலா செல்ல தேர்வாகியுள்ளார்.

இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த அஜிதார், நான் 13 வயதில் திருநங்கையாக வெளியே வந்தேன். என் பெற்றோரும் என்னை ஆட்சேபனையின்றி ஏற்றுக்கொண்டனர். எனக்கு சிறுவயதில் இருந்தே நடிப்பில் ஆர்வம் உண்டு. 9ஆம் வகுப்பு முதல் மாநகராட்சி பள்ளியில்தான் படித்தேன். 11ஆம் வகுப்பிலிருந்து திருநங்கைகளின் சான்றிதழ்களுடன் கூடிய பெண் சீருடையை அணிந்து பள்ளிக்கு வருகிறேன். பெண் சீருடையில் பள்ளிக்குச் செல்லும் தமிழகத்தின் முதல் திருநங்கை நான்தான்.

கடந்த ஜனவரி மாதம் நடந்த மத்திய அரசின் கலா உத்சவ் போட்டியில் பள்ளி, மாவட்டம் மற்றும் மாநில அளவில் வெற்றி பெற்று தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க ஒடிசா சென்றேன். அங்கு தேசிய அளவில் பங்கேற்று முதலிடம் பிடித்தேன். பிப்ரவரி மாதம் நடந்த அரசு கலை விழாவில் கலந்துகொண்டு, மாநில அளவில் முதலிடம் பெற்றேன். கல்வி சுற்றுலா செல்லும் தமிழகத்தின் முதல் திருநங்கை மாணவியாக தேர்வானது மகிழ்ச்சி அளிக்கிறது. ஊக்குவித்த ஆசிரியர்களுக்கும், சக மாணவர்களுக்கும் நன்றி.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசின் வெளிநாட்டு கல்வி சுற்றுலாவுக்கு தேர்வான மாணவி அஜிதாவுக்கு கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *