திருப்பதியில் தீவிரவாதிகள் ஊடுருவல்? பகீர் இமெயில்.. முழு மலையையும் சுற்றி வளைத்த போலீஸார்.. என்னாச்சு?

திருமலை திருப்பதிக்குள் தீவிரவாதிகள் ஊடுருவியதாக மர்ம இமெயில் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருமலை திருப்பதியில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மர்ம இமெயில் ஒன்று வந்த நிலையில், திருப்பதி கோயில் மற்றும் மலைப்பகுதி முழுவதையும் ஆந்திரா போலீஸார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்புதான், திருப்பதி கோயிலுக்கு மேலே ஆளில்லா விமானம் பறந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற, பிரசித்தி பெற்ற கோயில்களிலேயே திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு என்று தனி இடம் உண்டு. இந்தக் கோயிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அதுமட்டுமல்லாமல், பிரபலங்களும், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.

இது ஒருபுறம் இருக்க, திருப்பதி ஏழுமையான் கோயிலுக்கு நீண்டகாலமாகவே தீவிரவாத அச்சுறுத்தல் இருந்து வருகிறது. அந்த வகையில், கோயிலில் தாக்குதல் நடத்த சதி செய்தது, மிரட்டல் விடுத்தது போன்ற செயல்களில் ஈடுபட்ட தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இவ்வாறு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதன் காரணமாக, திருப்பதி ஏழுமலையான் கோயிலை பாதுகாப்பதற்காகவே ஆக்டோபஸ் எனும் படைப்பிரிவு ஏற்படுத்தப்பட்டது. 90 பேர் கொண்ட இந்தப் படைப்பிரிவு 24 மணிநேரமும் கோயிலை சுற்றி துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு கொடுப்பார்கள். கடந்த 2014-ம் ஆண்டு முதல் இந்த ஆக்டோபஸ் படைப்பிரிவு திருப்பதி கோயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்ற சூழலில் தான், திருப்பதி மலையில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்தாக திருப்பதி போலீஸாருக்கு மர்ம இமெயில் ஒன்று வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார், இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான அதிதிகாரிகள், தேவஸ்தான கண்காணிப்பு துறையினர் ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, திருப்பதி மலை முழுவதும் உயர்பாதுகாப்பு எச்சரிக்கையை போலீஸார் கொடுத்துள்ளனர். மேலும், அந்த மலை முழுவதையும் போலீஸார் தங்கள் கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வந்துள்ளனர். மேலும், அங்கு பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

விடிய விடிய வாகனத் தணிக்கைகளும், ரோந்துப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அதேபோல, திருப்பதி கோயிலை சுற்றிலும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கிரார்கள். அதுதவிர, கோயிலுக்குள் ஆக்டோபஸ் படைப்பிரிவினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அதிக அளவில் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டு பக்தர்களின் நடவடிக்கை கண்காணிக்கப்பட்டு வருவதாக ஆந்திர போஸீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, திருப்பதி எஸ்பி பரமேஸ்வர ரெட்டி, இந்த மெயில் வெறும் புரளி என்றும், பக்தர்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *