தலைப்புச் செய்திகள் (06-03-2024)

*நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக சென்னையில் அதிமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவினருடன் தேமுதிக குழுவினர் பேச்சு வார்த்தை … விருதுநகர், திருச்சி, கள்ளக்குறிச்சி மற்றும் வடசென்னை தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன் வந்து உள்ளதாக தகவல். பாமகவுடன் கூட்டணி அமைப்பது தெளிவான பிறகு தேமுதிகுவுக்கான தொகுதிகள் அறிவி்க்கப்படலாம் என்றும் கருத்து.

*பெங்களூரு ராமேஸ்வரம் உணவு விடுதியில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்ட நபர் குறித்த தகவல்களை தருபவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என தேசிய புலனாய்வு அமைப்பு அறிவிப்பு … நான்கு நாட்களாகியும் துப்பு துலங்காததால் புதிய முயற்சி.

*தமிழ்நாட்டில் சட்ட விரோத மணல் விற்பனை தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடைவிதிக்கக் கோரிக்கை … மாவட்ட ஆட்சித் தலைவர்கள் சார்பில் சீராய்வு மனுத் தாக்கல்.

*சனாதனத்திற்கு எதிராக பேசிய வழக்கில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு பதவி விலகத் தேவையில்ல்லை என்று தீர்ப்பளித்து வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம் …. அமைச்சர் போன்று உயர்பதவியில் இருப்பவர்கள், சனாதனம் குறித்து பேசியிருக்கக் கூடாது என்றும் நீதிபதி கருத்து.

*பயணாளிகளை மக்கள் நலத் திட்டங்கள் சென்றடைகிறதா என்பதை அறியும் நீங்கள் நலமா என்ற திட்டத்தை தொடங்கிவைத்த முதலமைச்சர் ஸ்டாலின் பயணாளிகளுடன் தெலைபேசியில் உரையாடல் … வெள்ள நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு.

*நீங்கள் நலமா என்று கேட்கும் முதல்வர் அவர்களே நாங்கள் நலமாக இல்லை. நலத்திட்டங்கள் நின்றுப் போச்சு. சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுப்போச்சு … சொத்து வரி, வீட்டு வரி, குடி நீர் வரி, மின் கட்டணம் உயர்ந்தாச்சு, விலை வாசி விண்ணைத் தொட்டாச்சு என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.

*அண்ணா தலைமையில் திமுக 1967 மார்ச் 6 – ஆம் தேதி ஆட்சி அமைத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நினைவு கூர்ந்து , முதன் முதலாக ஒரு மாநிலக் கட்சி ஆட்சி அமைத்த நாள் என்று வலைதளத்தில் பதிவு … மீண்டும் வரலாறு படைப்போம், நாட்டைக் காப்போம் என்றும் உறுதி.

*மதுரை – பெங்களூரு இடையே யான வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைப்பதற்கு பிரதமர் மோடி மார்ச் 13-ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு வரவுள்ளதாக தகவல் … தென் மாவட்டத்தில் பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள இருப்பதாகவும் செய்தி.

*முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சொந்த சின்னம் இல்லாததால் அவரது தரப்பு வேட்பாளரை தாமரை சின்னத்தில் போட்டியிடுமாறு பாஜக வலியுறுத்துவதாக தகவல் … பாஜக நிபந்தனையை ஏற்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில் ஓ.பன்னீர் செல்வம்.

*நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக கூட்டணியில் இணைந்தது அகி்ல இந்திய பார்வடு பிளாக் கட்சி … சென்னையில் எடப்பாடி பழனிசாமியை சந்தி்த்து கூட்டணியை உறுதி செய்தார் அகில இந்திய பார்வர்டு பிளாக் தலைவர் கதிரவன்.

*நாடு வளம் பெற, ஒற்றுமை உணர்வு ஓங்கிட, மீண்டும் நல்லாட்சி அமைந்திட பாஜகவுடன் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி வைப்பதாக சரத்குமார் அறிவிப்பு … திருநெல்வேலி தொகுதி ஒதுக்கப்படலாம் என்று தகவல்.

*அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கில் சிபிஐ தரப்பு அளித்த பதிலால் சிறப்பு நீதிமன்ற நீதிபதி அதிருப்தி … கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு இன்னும அனுமதி கிடைக்க வில்லை என்று கூறியதால் சி.பி.ஐ.யின் விசாரணை அதிகாரியை 21- ஆம் தேதி ஆஜராக உத்தரவு.

*தமிழை வழக்காடும் மொழியாக அறிவிக்கக் கோரும் பிரச்சினையில் நீதிமன்றத்தால் ஒன்றும் செல்வதற்கு இல்லை, தமிழக அரசிடம் கொண்டு செல்லுங்கள் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்… தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி எழும்பூரில் கடந்த 28 -ஆம் தேதி முதல் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்ததுக் குறித்து தொடரப்பட்ட வழக்கில் கருத்து. அமைச்சர் ரகுபதி கேட்டுக் கொண்டதை அடுத்து போராட்டம் ஒத்திவைப்பு.

*தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம் கவலை அளிப்பதாக டாக்டர் ராமதாஸ் வேதனை … காவல் துறையும் உளவுத் துறையும் செயலிழந்துவிட்டதா என்று கேள்வி.

*தேர்தல் பத்திரத் திட்டம் குறித்த தகவல்களை உச்ச நீதிமன்றத்திடம் தெரிவிப்பதற்கு ஸ்டேட் வங்கி அவகாசம் கேட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் … ஸ்டேட் வங்கி நிர்வாகத்தை கண்டித்து சென்னையில் மார்க்சி்ஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்.

*கோவை மாவட்டம் ஈஷா மையத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளாமல் விழாக்களை நடத்துவதற்கு தடை விதிக்கக் கோரி சிவஞானம் என்பவர் வழக்கு … கழிவு நீர் விவசாய நிலத்தில் வெளியேற்றப்படவில்லை என்பதை உறுதி செய்யுமாறு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு நீதிமன்றம் உத்தரவு.

*சென்னை துறைமுக நிர்வாகக் கழகம் ரூ 12.5 கோடி வரிப்பாக்கி … வரியை உடனடியாக செலுத்த வலியுறுத்தி துறைமுக அலுவலகத்தில் மாநகராட்சி சார்ப்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளதாக தகவல்.

*புதுச்சேரி நகரத்தில் காணாமல் போன சிறுமியை வீட்டின் அருகே வசிக்கும் சிலர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றபோது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. .. போலீஸ்க்கு பயந்து உடலை கால்வாயில் வீசியதாக கருணாஸ் (19), விவேகானந்தன் (59) என்ற இருவரைப் பிடித்து போலீஸார் விசாரணை .

*சிறுமியின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி புதுச்சேரியில் பெண்கள், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆங்காங்கே போராட்டம் …. காந்தி சிலை முன்பு நடைபெற்ற போராட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசர் தடியடி.

*போராட்டங்கள் வலுத்ததால் சிறுமியின் குடும்பத்திற்கு ரூ 20 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் ரங்கசாமி … பெற்றோருடன் முதல்வர் நடத்திய பேச்சு வார்த்தையை அடுத்து உடலை வாங்கிக் கொள்ள ஒப்புதல்.

*போதைப் பொருட்கள் தாரளமாக புழங்கும் நாட்டில் பெண்களும் குழந்தைகளும் நிம்மதியாக வாழமுடியாது என்று கமல்ஹாசன் கருத்து … புதுச்சேரி சிறுமி கொலை , ஜார்கண்டில் வெளிநாட்டுப் பெண் பலாத்காரம் போன்ற நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டி அறிக்கை.

*அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவது உறுதி என்று உத்திர பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் பிரதீப் சின்கால் பேட்டி… ராகுல் போட்டியிடுவது பற்றி இரண்டு நாளில் அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்.

*கொல்கத்தாவில் நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி … ஹூக்ளி ஆற்றில் 32 மீட்டர் ஆழத்தில் 520 மீட்டர் நீளத்திறக்கு அமைக்கப்பட்டு உள்ள மெட்ரோ பாதையை ரயில் கடப்பதற்கு 45 வினாடி நேரத்தில் கடக்கும் என்று எதிர்ப்பார்ப்பு.

*மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காலி தீவில் ஷேக் ஷாஜகான் என்ற திரினாமுல் காங்கிரஸ் பிரமுகரால் பாதிக்கப்பட்ட பெண்களை மாவட்டத் தலைநகரத்தில் சந்தித்து குறைகளை கேட்டார் பிரதமர் மோடி… குற்றவாளிகளை திரினாமுல் கட்சி காப்பாற்றியதாகவும் புகார்.

*கடன் வாங்கிக்கொண்டு இந்தியாவை விட்டு தப்பியோடிய விஜய் மல்லையா, நீரவ் மோடி ஆகியோரும் பிரதமர் மோடி குடும்பத்தினரா என்று கேள்வி கேட்டு டெல்லியில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு … சுவரொட்டி குறித்து டெல்லி போலீசில் புகார்.

*உத்திர பிரதேசத்தில் ஜானவுபூர் தொகுதி பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்.பி. தனஞ்செய் ஜிங் மற்றும் உதவியாளருக்கு ஏழு ஆண்டு சிறைத் தண்டனை … அதிகாரியை கடத்தி மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் ஜான்பூா நீதிமன்றம் தீர்ப்பு.

*அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக போட்டியிடுவதற்கான தகுதித் தேர்தலில் டொ னால்ட் ட்ரம்பை எதிர்த்து களத்தில் இருந்த இந்திய வம்சா வழியைச் சேர்ந்த நிக்கி ஹாலே விலக உள்ளதாக தகவல் … எதிர்பார்த்த அளவு கட்சிக்குள் ஆதரவை திரட்ட முடியாததால் விலகுகிறார் என்று கருத்து.

*வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவாக புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை….சென்னையில் ஆபரணத் தங்கத்தில் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்து 48,320- க்கு விற்பனை.

தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *