மே.22
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழக பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (மே.23) முதல் மே 25ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
அதேநேரத்தில் இன்று தமிழக உள்மாவட்டங்களில் ஒருசில இடங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனவும், அதிகபட்சமாக 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் வெப்பம் இருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.