May 17,2023
ஜூன் மாதம் 7 ஆம் தேதி ஓடிடி தளத்தில் அவதார் – தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு அவதார் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி வசூல் சாதனை செய்தது. அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, கனவுலகத்தை திரையில் காட்சிப்படுத்தி ரசிகர்களை வியக்க வைத்த அவதார் முதல் பாகம் ஏராளமான விருதுகளையும் அள்ளிக் குவித்தது. இதன்மூலம் உலகம் முழுவதும் அவதார் திரைப்படத்திற்கு என பல ரசிகர்கள் உருவாகினர். இந்த வெற்றியைத் தொடர்ந்து, ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், ”அவதார் – தி வே ஆஃப் வாட்டர்” என பெயரிடப்பட்ட இதன் 2ம் பாகம் வெளியானது. 13 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் வெளியான இந்த படம், உலக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சாம் வொர்திங்டன், ஜோ சல்டானா, ஸ்டீபன் லாங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் அவதார் – தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் ஜூன் மாதம் 7 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. நீண்ட நாட்கள் திரையரங்குகளில் வெற்றிநடை போட்ட இத்திரைப்படம், ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.