சென்னை லூப் சாலையில் போக்குவரத்து சீராகுமா? ஐ கோர்ட் சொன்னது என்ன?

ஏப்ரல் 19 – சென்னை மெரினா கடற்கரையில் லூப் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறும் இல்லாமல் மீன்கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் கலங்கரைவிளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை கடலோரம் போடப்பட்ட லூப் சாலையை ஆக்கிரமித்து மீனவர்கள் மீன் கடைகள் அமைத்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாகக் கூறி, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு ஒன்றைப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் , லூப் சாலையின் மேற்கு பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு அங்குள்ள உணவகங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்ந்து  அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநகராட்சிக்கு உத்தரவிட்டிருந்தனர்.

இதையடுத்து நேற்று புதன் கிழமை வழக்கு விசாரணைக்கு வந்த போது மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருவதாகவும், மீன் சந்தை அமைக்கும் வரை மீனவர்கள் குடியிருப்புக்கும் சாலைக்கும் இடையில் உள்ள இடத்தை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதனை மனுவாக தாக்கல் செய்யுமாறு மாநகராட்சிக்கு, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் பாலாஜி அமர்வு நேற்று உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று வியாழக்கிழமை காலை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி தரப்பில் சாலையின் மேற்குப் பகுதியில் உள்ள நடைபாதையில் தற்காலிகமாக மீன்கடைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் ஒழுங்கு செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் மீன் வாங்குவதற்கு லூப் சாலைக்கு வருகிறவர்களின் வாகனங்களை கலங்கரைவிளக்கத்தின் பின்புறமும், சீனிவாசபுரத்தின் அருகிலும் நிறுத்துவதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

சென்னை மாநகராட்சி மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள்,  போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லாமல் மீன்கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என்ற உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை ஜூன் 19ம் தேதிக்கு தள்ளிவைக்கப் பட்டுள்ளது.

மேலும், யாருக்கும் தரம்சங்கடம் ஏற்படுத்த விரும்பவில்லை எனவும், பொதுசாலை மாநகராட்சி சொத்தல்ல எனவும் அது மக்கள் சொத்து எனவும் குறிப்பிட்ட நீதிபதிகள், சாலையை ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது எனவும் இந்த விவகாரத்தை அரசியலாக்க கூடாது எனவும்  தெரிவித்தனர்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *