சென்னையில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு முழு உருவச்சிலை – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..

முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்னையில் முழு உருவச்சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரில், இன்று (ஏப்.20) காலை கேள்வி நேரத்துடன் பேரவை நிகழ்வுகள் தொடங்கின. அதனைத்தொடர்ந்து 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அப்போது பேசிய முதல்வர், “மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு இந்த திராவிட மாடல் அரசு, மரியாதை செய்யும் மகத்தான அறிவிப்பை வழங்குகிறேன். தமிழகத்தை பொறுத்தவரை தனது ரத்த சொந்தங்கள் வாழும் மாநிலமாக வி.பி.சிங் நினைத்தார்கள். தந்தை பெரியாரை தனது உயிரினும் மேலான தலைவராக ஏற்றுக்கொண்டார்கள். தலைவர் கருணாநிதியை சொந்த சகோதரனைப் போல மதித்தார்கள். சமூக நீதிக்காவலர் வி.பி.சிங் அளித்த ஊக்கத்தின், உற்சாகத்தின் காரணமாகத்தான் சமூக நீதிப் பார்வையில், சமூக நீதிப் பயணத்தில் கொஞ்சமும் சலனமும், சமரசமும் இல்லாமல் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. சமூக நீதிக் காவலர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சென்னையில் அவருக்கு முழு உருவச்சிலை அமைக்கப்படும்” என்று அறிவித்தார். முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்னையில் முழு உருவச் சிலை அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு சட்டப்பேரவையில் ஓ.பி.எஸ், செல்வப்பெருந்தகை, ஜி.கே.மணி, வானதி ஸ்ரீனிவாசன், ஜவாஹிருல்லா, வேல் முருகன், நாகை மாலி, சதன் திருமலைக்குமார், ஈஸ்வரன் ஆகியோர் வரவேற்பு தெரிவித்தனர்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *