சென்னையில் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை- எ.வ.வேலு

சென்னை ஜி.பி.சாலையில் மழைநீர் தேங்காமல் இருக்க இரண்டு நாட்களில் pre cast முறையில் கால்வாய் அமைக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

சென்னை வால் டேக்ஸ் சாலையில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணியினை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ.வ.வேலு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டனர். இதில் நெடுஞ்சாலைத்துறை சென்னை மாநகராட்சி உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

ஆய்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஏ.வ.வேலு, “வால்டாக்ஸ் சாலையில் நெடுஞ்சாலை துறை மேற்கொண்டு வந்த மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகள் முழுவதுமாக முடிவுறும் நிலையில் உள்ளது. பருவமழைக்கு முன்னர் தண்ணீர் செல்வதற்கான பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், சிறு சிறு இணைப்பு பணிகள் மட்டும் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் வரும் 15 ஆம் தேதிக்குள் முடிக்கப்படும். அதன் பின்னர் நடைபாதைகள் சீரமைக்கப்படும். இந்த பணிகள் அனைத்தும் முடிந்த பின்னர், ஒரு முறை சிறப்பு ஒதுக்கீடாக இந்த சாலை மீண்டும் புதுப்பிக்கப்படும்.

சென்னையில் போடப்படும் அனைத்து சாலைகளும் முறையே மில்லிங் செய்த பின்னரே போடப்படுகிறது. எங்கேனும் புதிதாக சாலை அமைப்பதால் வீடுகள், கட்டடங்கள் பள்ளத்தில் செல்லும் நிலை இருந்தால் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டு மறுசீரமைப்பு செய்யப்படும். மழைநீர் கால்வாய்களில் குப்பைகள், கழிவுகள் சென்று மழை காலத்தில் அடைப்பு ஏற்படுத்துவதை தவிர்க்கும் வகையில் முறையாக தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு வருகிறது. பருவமழைக்கு முன்பாக அவை அனைத்து இடங்களிலும் செய்து முடிக்கப்படும்.

சென்னையில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுவிட்டன. சென்னை ஜி.பி.சாலையில் மட்டும் உள்ள மிச்ச பணிகளை விரைந்து முடிக்க இரண்டு தினங்களுக்கு முன்பாக, நெடுஞ்சாலை துறை, மாநகராட்சி மற்றும் மின்சார வாரியத்தின் பொறியாளர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இரண்டு நாட்களுக்குள் ஜி.பி.சாலை ஒட்டிய அண்ணா சாலையில் பணிகளை முடிக்க இரவு நேரத்தில் pre cast முறையில் கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிந்ததும். சென்னையில் எந்த பகுதியிலும் தண்ணீர் தேங்காத நிலை ஏற்படுத்தப்படும்” எனக் கூறினார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *