சென்னையில் உலகத்தரம் வாய்ந்த பன்னாட்டு அரங்கம் – கலைஞர் நூற்றாண்டுவிழா தொடக்க நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ஜூன்.2

சென்னையில் 25 ஏக்கர் பரப்பளவில் 5ஆயிரம் பேர் அமரும் வகையில் உலகத் தரம் வாய்ந்த கலைஞர் கன்வென்சன் சென்டர் என்ற பெயரில் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, கலைஞர் நூற்றாண்டு விழாவுக்கான இலச்சினையை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மகாத்மா காந்தியின் பேரனும், மேற்குவங்க முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி பங்கேற்று இலச்சினையைப் பெற்றுக்கொண்டார்.

விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி என்றால் அது கலைஞர் கருணாநிதிதான். தமிழ் சமூகத்திற்கு உயிராக இருந்தவர் கருணாநிதி. அவர் வகுத்த வழியில்தான் தமிழகத்தில் அனைத்துத்துறைகளும் இயங்குகின்றன. மக்கள் மனங்களில் இன்றும் ஆட்சி செய்கிறார் கருணாநிதி.
திராவிட மாடல் அரசின் புகழை முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு காணிக்கையாக்குகிறேன். 50 ஆண்டு காலத்தின் தமிழகத்தில் வளர்ச்சிக்கு அடித்தளம் இட்டவர் கலைஞர் கருணாநிதி.

அரசியல் மற்றும் பொதுவாழ்வில் பக்குவமானவர் கருணாநிதி. நிர்வாகத்தை கையாளுவதில் கைதேர்ந்தவர் கருணாநிதி. கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது. நூற்றாண்டு விழா கருணாநிதி புகழ்பாடும் விழாவாக மட்டுமல்லாமல், தமிழ் சமுதாயத்திற்கு அவர் செய்தவற்றை நினைவுப்படுத்தும் விழாவாக இருக்கும். சென்னையில் டைடல் பார்க்கை உருவாக்கி தகவல் தொழில் புரட்சியை ஏற்படுத்தியவர் கருணாநிதி. பெரியாரின் கொள்கை வாரிசான கருணாநிதியை வாழ்த்துவதற்காக காந்தியின் பேரன் வந்துள்ளார்.

பெரியார் சுய மரியாதை இயக்கத்தை துவங்கும் முன் காந்தியின் தொண்டராக தான் இருந்தார். கோட்சேவால் காந்தி சுட்டு கொல்லப்பட்ட போது பெரியார் அடைந்த வேதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. உலக தரத்தில் சென்னையில் கலைஞர் கன்வென்சன் என்ற பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும். 25 ஏக்கர் பரப்பளவில் 5,000 பேர் அமரும் வகையில் உலக தரத்தில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும். பன்னாட்டு மாநாடுகள், திரைப்பட விழாக்கள் எல்லாம் அங்கு நடைபெறும். சிங்கப்பூர் ஜப்பான் சுற்றுப்பயணத்தின் போது இந்த எண்ணம் உதயமானது. மிக பிரம்மாண்டமான முறையில் கலைஞர் கன்வென்சன் சென்டர் அமையவுள்ளது. ஜப்பான், சிங்கப்பூரில் மேற்கொண்ட பயணத்தில் ஏராளமான முதலீடுகளை ஈர்த்துள்ளேன். இந்தியாவில் தொழில் தொடங்கினால், தமிழகத்தில் தான் முதலீடு செய்வோம் என்று நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *