செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது – மு.க.ஸ்டாலின்

May 28, 2023

குடியரசுத் தலைவரையே புறந்தள்ளி, அனைத்து எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கும் ஆளாகி நடைபெறும் திறப்புவிழா நாளில் அராஜகமும் அரங்கேறுவதுதான் அறமா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிட்ஜ் பூஷன் சரண் சிங், மல்யுத்த பயிற்சி பெறும் மைனர் வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவரை கைது செய்ய வலியுறுத்தி மல்யுத்த வீரர் வீராங்கனைகள் ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் போராட்டம் நடத்தினர். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் மீண்டும் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் இரவு பகலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாடாளுமன்ற திறப்பு விழாவையொட்டி டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட வீராங்கனைகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.

இதுதொடர்பான செய்தியை ட்விட்டரில் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் சொல்லிப் பல மாதங்கள் ஆகிவிட்டன. அவர் மீது இதுவரை அக்கட்சியின் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து தலைநகரில் போராடி வருகிறார்கள். இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவின்போது, போராட்டம் நடத்திய அவர்களை இழுத்துச் சென்றும் – தூக்கிச் சென்றும் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது.

குடியரசுத் தலைவரையே புறந்தள்ளி, அனைத்து எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கும் ஆளாகி நடைபெறும் திறப்புவிழா நாளில் அராஜகமும் அரங்கேறுவதுதான் அறமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *