சூடானில 60 பேர் இறப்பு. துப்பாக்கிச் சண்டை நீடிப்பு

ஏப்ரல்- 17. ஆப்பிரிக்க நாடான சூடான் நாட்டில் நடக்கும் மோதல் 60 பேரை பலி கொண்டு விட்டது. ராணுவத்தினருக்கும், துணை ராணுவப் படையினருக்கும் இருந்து வரும் பகை கடந்த வாரம் பெரிய அளவில் வெடித்ததால் நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. தலைநகர் கார்டூம் உட்பட பல நகரங்களில் இரு படை பிரிவுகளுக்கும் இடையே சண்டை , இரண்டாவது நாளாக ஞாயிற்றுக் கிழமை பகலிலும் நீடித்தது. இந்த மோதல்களினால் திங்களன்று காலை வரை 60 பேர் இறந்துவிட்டனர். இவர்களில் இந்தியர்கள் நான்கு பேரும் அடக்கம். ஆயிரம் பேர் வரை காயம் அடைந்துள்ளனர்.அமெரிக்கா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் மோதலை நிறுத்துமாறு இருதரப்புக்கும் வேண்டுகோள் விடுத்து உள்ளன.
சூடான் நாட்டில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அதிபர் பதவியை தக்க வைத்துக் கொண்டு இருந்தவர் உமர் அல் பஷீர். இவரை கடந்த 2019 ஆம் ஆண்டில் அகற்றிவிட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ராணுவ ஆட்சிக்கு துணை ராணுவ படை எனப்படும் ஆர்.எஸ்.எப். எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இந்த ஆர்.எஸ். எப் இந்தியாவில் உள்ள சி.ஆர்.பி.எப். போன்றது. ஆர்எஸ்எப் – க்கு நாட்டில் உள்ள கிளர்ச்சிக் குழுக்களும் ஆதரவளிக்கின்றன. தலைநகர் கார்டூமில் உள்ள அதிபர் மாளிகை, விமான நிலையம் போன்ற இடங்களை துணை ராணுவப் படையான ஆர்எஸ்எப் கைப்பற்றியதாக அறிவித்ததை அடுத்து இரு அமைப்புக்கும் பலநகரங்களில் துப்பாக்கிச் சண்டை மூண்டது.
கார்டூம் நகரத்தில் உள்ள இந்திய தூதர், சூடான் நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டு உள்ளார்.
செங்கடலை ஒட்டி உள்ள சூடான் கடந்த 2011 ஆம் ஆண்டில் சூடான், தெற்கு சூடான் என்ற இரண்டு நாடுகளாக பிரிந்தது குறிப்பிடதக்கது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *