சீ்ர்காழியில் கிடைத்தது ராஜ ராஜ சோழன் காலத்து சிலைகள் ?

சீர்காழி சட்டநாதர் கோவிலில் கிடைத்து உள்ள 22 ஐம்பொன் சிலைகளும் ராஜராஜ சோழன் காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. இந்தியாவில் இது வரை கிடைக்கப் பெறாத உலோகத்தால் இந்த சிலைகள் செய்யப்பட்டு இருப்பதும் தெரியவந்து உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள பழமை வாய்ந்த சட்டநாதர் கோவிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு மே மாதம் 24-ம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதற்கான யாகசாலை அமைப்பதற்கு மண் எடுக்க கோயில் உட்புறத்தில் ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டினார்கள். அப்போது 2 அடியில் புதைந்திருந்த ஐம்பொன் சிலைகள் கிடைத்தன. விநாயகர், முருகர், வள்ளி, தெய்வானை, அம்பாள், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் உள்ளிட்ட 22 ஐம்பொன் சிலைகளும் அரை அடி முதல் 2 அடி வரை உயரம் கொண்டதாகும். மேலும் திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற சீர்காழி பதிகம் தாங்கிய தேவார செப்பேடுகளும் 400-க்கும் மேல் கிடைத்தன.

இதனை ஆய்வு செய்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி,  சிலைகள் அனைத்தும் சோழர் காலத்துக்குரிய சிலைகள் என்றார். மேலும் பூமிக்கு அடியில் கிடைத்துள்ளதால் சிலைகள் அனைத்தும் அரசுக்கு சொந்தமானது என்று கூறிய ஆட்சியர் அனைத்தையும் அரசு கருவூலத்தில் வைக்குமாறு வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார்.

சிலை கிடைத்த தகவல் கிடைத்ததும் தருமபுர ஆதீனம் 27 வது சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தம் நேரில் வந்து பார்வையிட்டார். அப்போது அவர், கோயில் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதால் சிலைகள் அனைத்தும் சட்டநாதர் கோவிலுக்கே சொந்தம் என்று ஆட்சியரிடம் கூறினார். இதற்கு ஆட்சியர் மகாபாரதி,  தொல்லியல்துறை மூலம் உரிய ஆய்வு செய்த பிறகே சிலைகள் சோழர் காலத்தைச் சேர்ந்தவயைா?அல்லது தருமாபுரம் ஆதீனத்தால் ஒரு காலத்தில் புதைத்து வைக்கப்பட்ட சிலைகளா ? என்பது தெரிய வரும், அது வரை கருவூலத்தில் இருக்கவேண்டும் என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து சென்னையில் இருந்து இந்து சமய அறநிலையத்துறை பதிப்பக பிரிவு ஆய்வாளர்கள் சண்முகம், சந்தியா, சுவடி திரட்டுனர் விஸ்வநாதன், சுவடி பராமரிப்பாளர் பிரகாஷ் குமார் உள்ளிட்ட  6 பேர்  கொண்ட குழுவினர் சீர்காழி வந்தனர்.

அவர்களின் ஆய்வில் செப்பேடுகள் தலா 400 கிராம் எடையும் 68 சென்டிமீட்டர் நீளமும் ஏழு புள்ளி ஐந்து சென்டிமீட்டர் அகலமும் உடையது என்பது தெரியவந்தது. சட்ட நாதர் கோவிலில் உள்ள கல்வெட்டுகளில் தேவாரப் பாடல்கள், செப்பேடுகளில் பதிக்கப்பட்டுள்ளதாக  குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான செப்பேடுகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படாமல் இருந்த நிலையில் முதன் முறையாக தேவாரம் பதிக்கப்பட்ட 400 செப்பேடுகள் கிடைத்து உள்ளன. இந்த செப்பேடுகளில் புதிய தேவாரப் பாடல்கள் உள்ளனவா என்பதும் பற்றியும் பதிப்பகப் பிரிவு குழுவினா் ஆய்வு மேற்கொண்டு உள்ளனர்.

இதனிடையே சிலைகள் அனைத்தும் சோழப் பேரரசன் ராஜராஜ சோழன் காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.

ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது சீர்காழி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைவரும் கோவிலுக்கு வந்து சிலைகளை ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். கிடைத்து உள்ள சிலைகளின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கலாம் எனகூறப்படுகிறது

நாயன்மார்கள் எனப்படும் சைவ சமயப் பெரியவர்கள் நான்கு பேரில் திருஞானசம்பந்தர் பிறந்த ஊர் என்ற பெருமை சீர்காழிக்கு உண்டு. அவருக்கு மூன்றாவது வயதில் சட்ட நாதர் கோயில் வளாகத்தில் பார்வதி உமையாள் முலைப்பால் வழங்கினார் என்பது ஐதீகம். இதனால் ஞானம் பெற்ற சம்மந்தர் “ தோடுடைய சிவன் விடையேறி காடுடைய சுடலைப் பொடிப் பூசி” .. என்ற தேவாரப் பாடலை பாடினார் என்பதும் வரலாறாகும்.

சீர்காழிக்கு முந்தைய பெயர் திருமலம் ஆகும். கரிகால் சோழன் இங்கு தங்கி இருந்ததாகவும் அரண்மனை யானை மாலையுடன் வந்து அவனுக்கு மாலையிட்டதாகவும் அதன் பிறகே கரிகாலன் சோழ மன்னனாக முடிசூட்டிக் கொண்டான் என்பதும் சீர்காழிக்குப் பெருமை சேர்க்கக் கூடியதாகும்.

பல பெருமைகளைக் கொண்ட சீர்காழி, இப்போது கிடைத்து இருக்கும் பழைய காலத்து சிலைகளினால் அனைவரின் கவனத்தை ஈர்த்து உள்ளது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *