சிதம்பரம் இருவிரல் கன்னித்தன்மை பரிசோதனை விவகாரம்…. பின்வாங்கிய ஆனந்த்!

May 30, 2023

சிதம்பரம் தீட்சிதர்கள் குடும்ப குழந்தை திருமணம் விவகாரம் தொடர்பாக ஆளுநர் கருத்து உண்மை என்று தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் கூறியுள்ளார். சிதம்பரம் தீட்சிதர்கள் குடும்ப குழந்தை திருமணம் தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆர்.ஜி. ஆனந்த் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அறிக்கை வழங்கினார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சில வாரங்களுக்கு முன்னர் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு கன்னித் தன்மை சோதனை நடைபெற்றதாக கூறி அதிர்ச்சியை கிளப்பினார்.

அந்த பேட்டியில், “சிதம்பரம் நடராஜர் கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் வராத கோவில். 2022ஆம் ஆண்டு சமூக நலத்துறை அதிகாரிகள் பழிவாங்கும் நோக்கோடு தீட்சிதர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். தங்கள் குழந்தைகளுக்கு வயது வருவதற்குள் குழந்தை திருமணம் செய்ததாக தீட்சிதர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் அங்கு அப்படியான குழந்தை திருமணம் ஏதும் நடைபெறவில்லை.

ஆறு, ஏழாம் வகுப்பு படிக்கும் அந்த குழந்தைகளை வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு கன்னித் தன்மை சோதனை செய்தனர். இதனால் அவர்களில் சிலர் தற்கொலைக்கு முயற்சித்தனர்” என்று கூறியிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்த தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு குழந்தை திருமணம் நடைபெற்றது என்றும் இரு விரல் சோதனை நடைபெறவில்லை என்றும் கூறினார்.

முன்னதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்தது. அப்போது ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த் சிதம்பரத்தில் விசாரணை மேற்கொண்டார், பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரு விரல் பரிசோதனை நடைபெறவில்லை என உறுதிபடுத்தினார்.

ஆனால் அவர் தற்போது தனது கருத்திலிருந்து பின் வாங்கியதோடு ஆளுநர் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் உண்மை என்று கூறியுள்ளார். அத்துடன் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து அறிக்கை வழங்கியுள்ளார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *