ஏப்ரல்.21
சந்தா தொகுதி செலுத்தாமல், டிவிட்டரில் கணக்கு வைத்துள்ள பயனாளர்களின் பக்கங்களில் இருந்த புளூ டிக்-கை டிவிட்டர் நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது.
உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை அண்மையில் வாங்கினார். அதைத் தொடர்ந்து, டிவிட்டரில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். டுவிட்டரில் பிரபலங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் தங்களது டுவிட்டர் கணக்குக்கு பயன்படுத்தும் புளூ டிக்குக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, இந்திய பயனாளர்களுக்கு மாதத்திற்கு ரூ.900 கட்டணம் எனக் கூறப்பட்டிருந்தது. ஏப்ரல் 20-ம் தேதிக்குள் கட்டணம் செலுத்தாத டுவிட்டர் கணக்குகளின் புளூ டிக்குகள் அகற்றப்படும் என்றும், எலான் மஸ்க் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது சந்தா செலுத்தாத அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் கணக்கில் புளூ டிக்கை டுவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது. அதன்படி, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட கணக்குகளின் புளூ டிக்குகளை டுவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.
இதேபோல், திரைப்பட நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், தனுஷ், சிலம்பரசன், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கார்த்தி, ஷாருக்கான் உள்ளிட்டோரின் புளூ டிக்குகள் நீக்கப்பட்டுள்ளன. திரைப்பட இயக்குனர்கள் சங்கர், செல்வராகவன், அட்லீ, லோகேஷ் கனகராஜ், திரைப்பட நடிகைகள் சமந்தா, கீர்த்தி சுரேஷ் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்டோரின் கணக்குகளின் புளூ டிக்கையும் டிவிட்டர் நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது.
அதேநேரத்தில், சந்தா தொகை செலுத்தியவர்களின் கணக்குளின் புளூ டிக்குகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழகத்தில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரின் கணக்குகளில் புளூ டிக்குகள் உள்ளன. அதேபோல், நடிகர்கள் கமல்ஹாசன், சூர்யா உள்ளிட்டோரின் டிவிட்டர் பக்கத்தில் புளூ டிக்குகள் நீக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.