ஏப்ரல் 17
48 மணி நேரத்திற்குள் அண்ணாமலை பகிரங்க மண்ணிப்புக் கேட்க வேண்டும் என்றும், ரூ. 500 கோடி நஷ்ட ஈடு கேட்டும் திமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்த நிலையில், பாஜக குறித்து ஆதரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியதற்காக பதிலுக்கு ரூ. 500 கோடி நஷ்ட ஈடு கேட்டு அண்ணாமலை அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இதற்கு முன்னர் BGR நிறுவனத்திற்கு முறைகேடாக திமுக வழங்கிய ஒப்பந்தத்தை வெளிக்கொண்டு வந்ததற்கு 500 கோடி ரூபாய் இழப்பீடு கோரி சட்ட அறிக்கை, திமுக தலைவர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களின் துபாய் பயணம் குறித்து கேள்வி எழுப்பியதற்காக 100 கோடி இழப்பீடு கோரி சட்ட அறிக்கையைத் தொடர்ந்து மீண்டும் ஒரு முறை என் மீது திமுக அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ். பாரதி அவர்கள், 500 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு சட்ட அறிக்கை அனுப்பியுள்ளார்.
கோடிகளில் சொத்துக்களை குவித்து வைத்திருக்கும் திமுகவினர் இருக்கும்போது, என்னிடம் மேலும் 500 கோடி ரூபாய் கேட்கிறார் திமுகவின் அமைப்புச் செயலாளர். திமுக அமைப்புச் செயலாளர் திரு ஆர் எஸ் பாரதி, DMK Files என்ற பெயரில் தமிழக பாரதிய ஜனதா கட்சி வெளியிட்ட காணொளி மற்றும் அதைத் தொடர்ந்து தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக நான் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பை முழுவதுமாகப் பார்த்ததற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அந்தக் காணொளியின் இணைப்பையும், இணையதள முகவரியையும் தாங்கள் அனுப்பிய சட்ட அறிக்கையில் வெளியிட்டதற்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். திமுகவினர் செய்த சொத்துக் குவிப்பை, தமிழக மக்கள் அறிந்து கொள்ள, ஏப்ரல் 14ஆம் தேதி நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பு உதவியதில் எனக்கும் மகிழ்ச்சியே. தாங்கள் வெளியிட்டுள்ள சட்ட அறிக்கையில், திமுகவினருக்கு சொந்தமான 3478.18 கோடி ரூபாய் மதிப்பிலான பள்ளிகளும், 34,184.71 கோடி ரூபாய் மதிப்பிலான கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் மதிப்பு பொய்யானது என்று தெரிவித்து விட்டு, அடுத்த வரியில், ஒருவர் திமுக உறுப்பினர் அல்லது நிர்வாகியாக இருந்தாலும், அவருக்குச் சொந்தமான சொத்துக்கள் மற்றும் நிறுவனங்கள், கட்சியின் சொத்தாக மாறாது என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.
ஒரு புறம் இது திமுக சொத்து இல்லை என்றும், மறுபுறம், வழங்கப்பட்ட திமுகவினரின் சொத்து விவரம் பொய்யென்று கூறுவதற்கு மட்டும் திமுக அமைப்புச் செயலாளருக்கு உரிமை இருக்கிறதா? திமுக பள்ளி மற்றும் கல்லூரி என்ற தலைப்பின் கீழ், ஒவ்வொரு ஊரிலும் திமுகவினருக்குச் சொந்தமான பள்ளி மற்றும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் விவரங்கள் வழங்கப்பட்டது.
உதாரணத்திற்கு, தமிழக முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களின் மகள் நடத்தும் சன்ஷைன் சீனியர் செகண்டரி ஸ்கூல், மக்களவை உறுப்பினர் திரு கலாநிதி வீராசாமி அவர்களின் உறவினர் நடத்தும் தி சென்னை பப்ளிக் ஸ்கூல், அமைச்சர் எ.வ. வேலு அவர்களின் மனைவி நடத்தும் ஜீவா வேலு இன்டர்நேஷனல் ஸ்கூல், அருணை பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரி போன்றவற்றை ஒவ்வொருவர் பெயரில் காண்பித்திருக்கிறோம்.